கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையால் காவிரியில் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையை முதலமைச்சர் பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், 'மேட்டூர் அணை நிரம்பியதால், மேற்கு, கிழக்கு கால்வாய்கள் பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. தற்போது பகல் நேரம் என்பதால் அதிகளவில் தண்ணீர் திறக்கவில்லை. ஏரி, குளங்கள் தூர்வாரும் பணியை கண்காணிக்க, ஐஏஎஸ் அலுவலர் பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார். கர்நாடகாவில் பெய்துவரும் கனமழை காரணமாக கபினி, கிருஷ்ணராஜசாகர் உள்ளிட்ட 4 அணைகளும் நிரம்பிவிட்ட நிலையில், இனி நமக்கு தேவையான அளவு நீர் கிடைக்கும்.
செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் பழனிசாமி தொடர்ந்து பேசிய அவர், நீலகிரியில் அமைச்சர் உதயகுமார், நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். மக்களவை உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.10 கோடியில் நிவாரணம் உதவி வழங்குவதாக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். அதில் என்ன நிவாரணம் செய்ய முடியும் என்றார்.
தொடர்ந்து மத்திய அரசு தமிழ்நாட்டை யூனியன் பிரதேசமாக அறிவித்தாலும்கூட தமிழ்நாடு அரசு அதை வேடிக்கைபார்க்கும் என்ற காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறிய கருத்துக்கு முதலமைச்சர் பதிலளிக்கையில், மத்திய அமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது தமிழ்நாட்டிற்கு என்ன திட்டங்களை கொண்டு வந்தார். காவிரி பிரச்னையை தீர்த்து வைத்தாரா? முல்லைப் பெரியாறு பிரச்னையை தீர்த்து வைத்தாரா? பாலாறு பிரச்னையை தீர்த்து வைத்தாரா? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். மேலும், ப.சிதம்பரம் இருப்பது பூமிக்கு பாரம்' என்று விமர்சித்தார்.