தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'தலைவெட்டி முனியப்பன் அல்ல.., புத்தர் சிலை தான்..!' - உயர் நீதிமன்றத்தீர்ப்பால் வேகமெடுக்கும் பணிகள் - சேலத்தில் புத்தர் சிலை

கோட்டை பெரியேரியில் தலைவெட்டி முனியப்பன் கோயிலில் இருப்பது புத்தர் சிலை என்பது உறுதியாகியுள்ள நிலையில், அந்த இடத்தை தொல்லியல் துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் அதற்கான பணிகள் வேகம் எடுத்துள்ளது.

’தலைவெட்டி முனியப்பன் அல்ல.., புத்தர் சிலை தான்..!’ - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
’தலைவெட்டி முனியப்பன் அல்ல.., புத்தர் சிலை தான்..!’ - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

By

Published : Aug 4, 2022, 10:31 PM IST

சேலம்:பெரியேரியில் அமைந்திருக்கும் தலைவெட்டி முனியப்பன் கோயிலில் உள்ளது புத்தர் சிலை தான் என்றும், அதை தமிழ்நாடு தொல்லியல் துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அங்கு மக்கள் பூஜை செய்ய அனுமதிக்கப்படாது எனவும் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த வழக்கு குறித்து விசாரணை செய்த உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் , “பெரியேரியில் இருப்பது புத்தர் சிலை தான் என்பதைத் தொல்லியல் துறை தெளிவாக தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அந்த சிற்பம் புத்தர் சிலை என முடிவுக்கு வந்த பிறகு தலைவெட்டி முனியப்பன் சிலை என இந்து சமய அறநிலையத்துறை கருதுவதை அனுமதிக்க முடியாது.

எனவே, புத்தர் சிலை உள்ள இடத்தை தமிழ்நாடு தொல்லியல் துறை தன் கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும். அங்குள்ளது புத்தர் சிலை தான் என்று அறிவிப்புப் பலகை வைக்க வேண்டும். அந்த இடத்தில் பொது மக்களை அனுமதிக்கலாம். அதேவேளையில், புத்தர் சிலைக்கு பூஜை உள்ளிட்ட பிற சடங்குகள் செய்ய அனுமதிக்கப்படவில்லை என்பதை தொல்லியல் துறை உறுதி செய்ய வேண்டும்” எனத் தீர்ப்பளித்தார்.

இந்த விவகாரம் குறித்து இந்திய புத்த சங்கத்தின் சேலம் மாவட்ட அமைப்பாளர் ரங்கநாதன் கடந்த 2011இல் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், ”சேலம் மாவட்டம், பெரியேரியில் இந்து சமய அறநிலையத்துறைக்குச்சொந்தமான இடத்தில், தலைவெட்டி முனியப்பன் கோயில் உள்ளது. அங்குள்ள சிலைக்கு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், கோயிலில் உள்ளது புத்தர் சிலை.

இதுதொடர்பாக கடந்த 2008இல் சர்ச்சை எழுந்தது. அந்த சிலை அமர்ந்த நிலையில் கைகளை மடியில் வைத்தபடி உள்ளது. சிலை மட்டுமின்றி அங்குள்ள, 26 சென்ட் நிலமும், புத்த சங்கத்துக்குச் சொந்தமானது. அந்த இடத்தை மீட்டு, புத்தர் சங்கத்திடம் மீண்டும் ஒப்படைக்கக்கோரி, இந்து சமய அறநிலையத்துறைக்கும், முதலமைச்சர் தனிப்பிரிவுக்கும் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை” என்று தெரிவித்திருந்தார்.

அதனையடுத்து மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சேலம் பெரியேரியில் இருப்பது தலைவெட்டி முனியப்பன் சிலையா..?, புத்தர் சிலையா..? என ஆய்வு செய்து, தமிழ்நாடு தொல்லியல் துறை ஆய்வு அறிக்கை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதையடுத்து தொல்லியல் துறை சார்பில் ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

அந்த அறிக்கையில், ”தலைவெட்டி முனியப்பன் கோயில் கட்டடம் நவீனத்தோற்றம் உடையது. அங்குள்ள சிலை கடினமான கல்லால் ஆனது. தாமரை பீடத்தில், 'அர்த்தபத்மாசனம்' எனப்படும் அமர்ந்த நிலையில் சிலை உள்ளது. கைகள், தியான முத்ரா கொண்டு உள்ளன. புத்தருக்கான அடையாளங்கள், சிலையின் தலைப்பகுதியில் உள்ளன. தொல்பொருள் மற்றும் வரலாற்றுச்சான்றுகள் கொண்டு ஆய்வு செய்யப்பட்டது. இதில், அந்த சிற்பம் மகா லட்சணங்களை கொண்டுள்ள புத்தர் சிலை தான்” என்று கூறப்பட்டிருந்தது.

இதனையடுத்து, தமிழ்நாடு அரசு தரப்பில் 'தலைவெட்டி முனியப்பன் சிலை எனக்கருதி பக்தர்கள், பொதுமக்கள் தொடர்ந்து வழிபட்டு வருகின்றனர். அதனால், இந்து சமய அறநிலையத்துறை வசமே அந்த இடம் தொடர அனுமதிக்க வேண்டும்” என வாதம் வைக்கப்பட்டதையடுத்து இருதரப்பினரையும் விசாரித்த நீதிபதி இந்தத் தீர்ப்பை அளித்துள்ளார்.

இதுதொடர்பாக சேலம் வரலாற்று சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜே.பர்னபாஸ் கூறுகையில், “சேலம் மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட புத்த மத உருவங்களில் இந்தச்சிலையும் ஒன்றாகும். ஆத்தூர் வட்டத்தில் உள்ள தியாகனூரில் இரண்டு பெரிய புத்தர் சிலைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக கி.பி. 16ஆம் ஆண்டில் சமய பூசல்களின்போது சமண, புத்தர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். மேலும் அவர்கள் வழிபட்ட புத்த, சமண சிற்பங்களின் தலை உடைக்கப்பட்டு வீசப்பட்டது. அதுபோன்று தான் சேலம் கோட்டையில் உள்ள புத்தரின் சிலையின் தலை உடைக்கப்பட்டது.

’தலைவெட்டி முனியப்பன் அல்ல.., புத்தர் சிலை தான்..!’ - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

இந்த சிலையின் தலையை மீண்டும் ஒட்டவைக்கப்பட்டது. ஆனால் தலை வெட்டப்பட்டு, மீண்டும் ஒட்டப்பட்டதால் இந்த சிலை இடது பக்கமாக சாய்ந்துள்ளது. தலை வெட்டப்பட்டு பின்பு ஒட்டப்பட்டதால் தலைவெட்டி முனியப்பன் என்று மக்கள் அழைத்து வழிபடத் தொடங்கினர்.
தலைவெட்டி முனியப்பன் சிலை, புத்தர் சிலை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் சிலை ஒப்படைக்கப்படும்” என்றார்.

இது தொடர்பாக சேலம் மாவட்ட தொல்லியல் துறை அலுவலர்கள், விரைந்து தலை வெட்டி முனியப்பன் கோயில் இடத்தை மீட்டு புத்தர் கோயிலாக செயல்பட நடவடிக்கைகள் தொடங்கப்படும் என்று தெரிவித்தனர்.

இதையும் படிங்க: மேட்டூர் அணையில் இருந்து 2 லட்சம் கன அடி நீர் திறப்பு!

ABOUT THE AUTHOR

...view details