கடந்தாண்டு கேரளாவில் சுட்டுக்கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் மணிவாசகத்தின் இறுதி ஊர்வலத்தில் கலந்தகொண்ட பாலன், சீனிவாசன், செல்வராஜ், சித்தானந்தம் உள்ளிட்டோர் மீது தமிழ்நாடு அரசு உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளது. இதனைக் கண்டித்தும் அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும் சேலத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், சிதம்பரம் மக்களவை உறுப்பினர் திருமாவளவன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது, "புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான அரசைக் கலைத்திருப்பது ஜனநாயக விரோத செயல், நாளை அது தமிழ்நாட்டிலும் நடக்கும், அதற்கான ஒத்திகைதான் புதுச்சேரியில் செய்யப்பட்டுள்ளது. என்ன செய்தாலும் சனாதன கும்பல் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரமுடியாது. இது பெரியரால் பண்படுத்தப்பட்ட மண், கர்நாடகாவில் கொல்லைப்புற வழியில் பாஜக ஆட்சியைப் பிடித்தது.
அதேபோல், மத்தியப் பிரதேசத்தில் அரசியல் நாடகத்தை அரங்கேற்றியது. இந்தப் போக்கை அனைத்து தரப்பு ஜனநாயக அமைப்புகளும் ஒன்றிணைந்து கண்டிக்க வேண்டும். பாலன், சீனிவாசன், செல்வராஜ், சித்தானந்தம் உள்ளிட்டோரை உடனடியாக விடுதலை செய்து உபா சட்டத்தை திரும்பப் பெறவேண்டும்.