தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரி கூட்டமைப்பின் சார்பில் பொறியியல் படிப்பிற்கான எதிர்கால வாய்ப்புகள் குறித்து மாணவர்களுக்கான கருத்தரங்கு சென்னையில் நடைபெற்றது. இதில் உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பொறியியல் படிப்புக்கான வேலைவாய்ப்புகள் குறித்து கூறினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்,
தமிழ்நாட்டில் பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை என்ற நிலையை கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக ஏற்படுத்தி வருகின்றனர். அதனைத் தெளிவுபடுத்தும் வகையில் இந்த கருத்தரங்கம் நடைபெற்றுள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பொறியியல் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கும் வகையில், கடந்த 2015ஆம் ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டினை நடத்தினார்.
அதன்பின் இந்தாண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பினை உருவாக்க ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு அதனை நிறைவேற்ற அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் சேர்வதற்கு ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 350 மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு ஜூலை 8ஆம் தேதி நடைபெறும் கலந்தாய்வில் சேர தயாராக உள்ளனர். தற்போது தொழில் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.
பொறியில் படிப்பில் அரசு நடத்தும் கலந்தாய்வு மூலம் 90,000 மாணவர்களும், நிர்வாக ஒதுக்கீடு மற்றும் தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் 60 ஆயிரம் மாணவர்கள் என சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் சேருகிறார்கள். தமிழ்நாட்டில் பொறியியல் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறையவில்லை என்பதற்கு இது ஒரு சான்று என அவர் கூறினார்
பொறியியல் படிப்பு மாணவர்களுக்கான கருத்தரங்கு