சேலம் மாவட்டம்,நிலவாரப்பட்டியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 50 அடி உயர கொடிக்கம்பத்தில் அதிமுக கொடியை அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஏற்றி வைத்தார்.
தொடர்ந்து விழாவில் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அப்போது அவர், ”ஓராண்டு கால திமுக ஆட்சியில் மக்களுக்கான நன்மை ஏதும் நடக்கவில்லை. ஸ்டாலின் அரசு திறமையற்ற அரசாக உள்ளது. தமிழ்நாடு முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதைப்பொருட்கள் புழக்கம் என பிரச்னைகள் தான் உள்ளன.
தேர்தல் நேரத்தில் சொன்னபடி, நீட் தேர்வு ரத்து செய்யப்படவில்லை. கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி என்று கூறிவிட்டு தற்போது 50 நிபந்தனைகள் சொல்லி மக்களை ஏமாற்றுகின்றனர். கடன் பெற்றவர்கள் 45 லட்சம் பேர். ஆனால் 15 லட்சம் பேருக்குதான் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களின் நிலை என்ன?” என்று அவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும் கேள்விகளையும் முன்வைத்தார்.
மேலும், “குறிப்பாக, பெண்களுக்கான உரிமைத்தொகை வழங்குவதாகக் கூறி பலர் நம்பி வாக்களித்தனர். ஆனால், உரிமைத்தொகை வழங்கப்படவில்லை. முதியவர் உதவித்தொகை உயர்த்தப்படும் என்று கூறி அவர்களையும் ஏமாற்றியவர் ஸ்டாலின். இப்படி, கொடுத்த வாக்குறுதிகளை எதுவும் நிறைவேற்றவில்லை.
தேர்தல் வந்தால் அழகாக பேசுவார்! முடிந்ததும் அப்படியே கைவிட்டுவிடுவார் ஸ்டாலின். ஜெயலலிதா கொண்டு வந்த மானிய விலை இருசக்கர வாகனத்திட்டம், மடிக்கணினி திட்டம் போன்றவற்றை நிறுத்திவிட்டனர். ஏழைகளுக்கான திட்டங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன.