சேலம்:சேலம் மாநகராட்சியின் 47ஆவது வார்டு கவுன்சிலரான புனிதா என்பவர் ஜல்லி திருடியதாக அதே பகுதியைச் சேர்ந்த நவமணி என்ற பெண் சேலம் செவ்வாய்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், "திமுக கவுன்சிலர் புனிதா, கார்கில் நகரில் குடிசை மாற்று வாரியம் மூலம் கட்டப்படும் குடியிருப்புகளுக்காக வைத்திருக்கும் ஜல்லிகளைத் திருடி வருகிறார்.
புனிதா மட்டுமல்லாமல், அவரது கணவர் சுதந்திரம், தந்தை வி.எம். துரை, சகோதரி தாமரைச்செல்வி ஆகியோர் தொடர்ந்து அரசின் கட்டுமானப் பணிகளுக்காக வைத்திருக்கும் ஜல்லியைத் திருடி வருகின்றனர். இதனை தட்டிக்கேட்டால் கொலை செய்து விடுவோம் எனவும் மிரட்டுகின்றனர். இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளனர்.