சேலம்:சேலம் மாவட்டம், வாழப்பாடி அடுத்த பேளூரைச் சேர்ந்தவர், அரவிந்த் (23). இன்னும் சில நாட்களில் திருமணம் நடைபெறவிருந்த நிலையில் அரவிந்த் போக்சோ சட்டத்தில் கைதாகியுள்ளார். அதுவும் திருமணம் செய்யவிருந்த பெண்ணே அரவிந்தின் சுயரூபத்தை அவரது செல்போன் மூலம் கண்டுபிடித்து அம்பலமாக்கியுள்ளார்.
இதுதொடர்பாக போலீசார் அளித்த தகவலின்படி, தனியார் ஆம்புலன்ஸ் டிரைவராக இருக்கும் அரவிந்துக்கும், அதே ஊரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் சில நாட்களுக்கு முன் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அதன்பின்னர் இருவரும் தனிமையில் சந்தித்து பேசி, லவ் டுடே சினிமா பாணியில் தங்களது செல்போன்களை மாற்றிக் கொண்டனர்.
இருவருக்கும் இடையே இனி ரகசியமே இருக்கக் கூடாது என முடிவெடுத்த நிலையில், அரவிந்த் தனது செல்போனில் இருந்த ரகசியங்களை கவனிக்கத் தவறியுள்ளார். செல்போனையே கையில் கொடுத்த வருங்கால கணவனின் துணிச்சலையும், பெருந்தன்மையையும் நினைத்து பெருமைப்பட்ட அந்த புதுப்பெண் செல்போனை ஆராய்ந்த போதுதான் அதிர்ச்சி காத்திருந்தது.
செல்போனில் பள்ளி மாணவி ஒருவரின் அரைநிர்வாண வீடியோ இருந்துள்ளது. அதிர்ச்சி அடைந்த இளம் பெண், தனது உறவினர்கள் மூலம் பள்ளி மாணவியின் பெற்றோரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து அதிர்ச்சியில் உறைந்து போன மாணவியின் பெற்றோர், வாழப்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
உடனடியாக புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்த மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் அரவிந்த்தை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் வேறு பெண்களின் வீடியோக்கள் அவரது செல்போனில் உள்ளனவா என்பது குறித்து விசாரணையினை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக வாழப்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் ஹரிசங்கரி கூறுகையில்,'முகநூல் போன்ற சமூக ஊடகங்களில் மாணவியர் தங்களது செல்போன் எண்ணை பகிர்வதை தவிர்க்க வேண்டும். அப்போதுதான் இது போன்ற ஆபத்துகளில் இருந்து தப்பிக்க முடியும்’ என்று தெரிவித்தார். திருமணத்திற்கு முன்பே மாப்பிள்ளையின் சுய ரூபம் தெரிந்ததால் அந்த இளம்பெண்ணும் திருமணத்தை நிறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: நடுவானில் தீர்ந்து போன எரிபொருள்.. சென்னையில் தரையிறங்கிய விமானம்.. தவித்த பயணிகள்..