சேலம்: மாற்றுத்திறனாளி ஒருவருக்கு மனு அளித்த சிறிது நேரத்திலேயே சக்கர நாற்காலி வழங்கியதோடு, சேலம் மாவட்ட ஆட்சியர் செ. கார்மேகமே, அவரை சக்கர நாற்காலியில் அமரவைத்து வாசல் வரை தள்ளி வந்து, வாகனத்தில் ஏற்றி, வீட்டிற்கு வழி அனுப்பி வைத்த சம்பவம் பாராட்டுகளைக் குவித்து வருகிறது.
கரோனா ஊரடங்கால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவில்லை.
இந்த நிலையில் அண்மையில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் தனக்கு சக்கர நாற்காலி வேண்டும் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தார், மாற்றுத்திறனாளி வரதராஜன்.
சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அடுத்த டேனிஷ்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர், ராமலிங்கம். இவரின் 22 வயது மகன் வரதராஜன், பிறந்தது முதலே உடல் நலம் பாதிக்கப்பட்டு மிகவும் அவதிக்கு உள்ளாகி நடக்கமுடியாமல் தவித்து வந்தார்.
மனுவின் மூலம் இதையறிந்த மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம், வரதராஜன் மனு அளித்த சிறிது நேரத்திலேயே அவருக்கு ரூ.6,400 மதிப்புள்ள சக்கர நாற்காலி வழங்க ஏற்பாடு செய்து கொடுத்தார்.