சேலம்: ஜாரி கொண்டலாம்பட்டி பகுதியில் உள்ள கிராம மக்கள் உடல்நலத்துடன் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காக சவ வேடிக்கை திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழா கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது சவ வேடிக்கை என்றால் ஒரு மனிதன் இறந்தது முதல் செய்யப்படும் சடங்குகளில் தொடங்கி, உயிரற்ற உடல் இடுகாடு கொண்டு சென்று அங்கு நடைபெறும் இறுதி சடங்குகள் வரை அனைத்து நிகழ்வுகளும் விழாவாக கொண்டாடப்படுகிறது.
சேலம் ஜாரி கொண்டலாம்பட்டியில் உள்ள மாரியம்மன், காளியம்மன், முனியப்பன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு நேற்று இந்த சவ வேடிக்கைத் திருவிழா நடைபெற்றது. இந்த நிலையில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு, சவ வேடிக்கை வேண்டுதல் நிறைவேற்றிக் கொண்டிருந்த நபர், திடீரென இறந்துவிட்டதால், கடந்த இரண்டு ஆண்டுகளாக கொண்டலாம்பட்டி பகுதியில் சவவேடிக்கைத் திருவிழா நடைபெறாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில், புதிய நபரை தேர்ந்தெடுத்து நேற்று மீண்டும் கோலாகலமாக சவ வேடிக்கை விழா நடைபெற்றது. சேலம் கொண்டலாம்பட்டி சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஜெயமணி (55). இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். தான் நலம் பெற்றால், உயிருடன் இருக்கும் போதே தனக்கு இறுதிச் சடங்கு செய்து நேர்த்திக்கடன் செலுத்துவதாக மனமுருக வேண்டிக் கொண்டுள்ளார்.