சேலம் மாவட்டம் அல்லிக்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் மேகனஸ்வரி(21). இவர், மன்னார்பாளையம் பகுதியைச் சேர்ந்த கட்டட தொழிலாளி கோபியை நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு மூன்று வயதில் சிம்பு என்ற மகனும் உள்ளார். கோபி தினந்தோறும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மேகனஸ்வரியை அடித்து துன்புறுத்துவதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார். இதனால், இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததால் தனது மகன் சிம்புவை அழைத்துக்கொண்டு சேலத்தில் வசிக்கும் தந்தை வீட்டிற்கு மேகனஸ்வரி சென்றுவிட்டார். பின்னர் அவரை பல முறை சந்தித்து குடும்பம் நடத்தவருமாறு கோபி அழைத்தும், வரமுடியாது என மேகனஸ்வரி மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நேற்றிரவு சேலத்திற்கு வந்த கோபி, துணிக்கடையில் பணிபுரிந்துவிட்டு வீட்டிற்கு வந்த மேகனஸ்வரியிடம் தகராறு செய்துள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் முற்றுகையில், கோபி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், மேகனஸ்வரியின் கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதனால், ரத்த வெள்ளத்தில் சாலையில் துடிதுடித்து மேகனஸ்வரி உயிரிழந்தார்.