சேலம் அடுத்த நாழிக்கல்பட்டியில் உள்ள வடமாத்தி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சேகர்(60), கூலித் தொழிலாளியாக உள்ளார். இவரது மகன் ஜெகன்(24), வெள்ளி பட்டறையில் கூலி வேலை செய்து வந்தார்.
குடிப்பழக்கத்துக்கு அடிமையான ஜெகன் தினமும் மது குடித்துவிட்டு வந்து, வீட்டில் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் ஜெகனுக்கும் அவரின் பெற்றோருக்கும் இடையில் அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், கடந்த 1ஆம் தேதி காலை ஜெகன் தனது வீட்டருகே ரத்தவெள்ளத்தில் கிடந்துள்ளார். அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரின் உறவினர்கள் ஜெகனை தூக்கிக்கொண்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
குடிபோதையில் ரகளை செய்த மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை அப்போது, உறவினர்கள் , ஜெகன் பெயிண்ட் அடிக்கும்போது தவறி கீழே விழுந்ததில் உடலில் கம்பி குத்திவிட்டதாக மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ஜெகன் நேற்று உயிரிழந்தார். ஜெகனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் வயிற்றில் இருந்த காயம் கம்பியால் ஏற்பட்டது அல்ல கத்தியால் குத்தப்பட்டது என காவல் துறையிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து மல்லூர் காவல் துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, கத்தியால் மகனை தந்தையே குத்தும் காட்சிகள் பதிவாகி இருந்தது.அந்தக் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அந்தக் காட்சிப்படி, நாழிக்கல்பட்டி பகுதியில் உள்ள இறைச்சி கடை அருகில் தந்தை சேகர் நின்று கொண்டிருந்த போது அவரது மகன் வந்து, அவரிடம் பேசுகிறார். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் திடீரென கடையில் இருந்த கத்தியை எடுத்து ஜெகனை சரமாரியாக அவரது தந்தையே குத்துகிறார். இதை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து சேகரை பிடித்து தடுத்து நிறுத்துகின்றனர். இதில் படுகாயமடைந்த ஜெகன் சிறிது தூரம் நடந்து சென்று தரையில் சுருண்டு விழுந்துள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த மல்லூர் காவல் துறையினர், ஜேகனின் தந்தை சேகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.