சேலம் மாவட்டத்தில் 20 ஏரிகள் குடிமராமத்து திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டு வருகின்றன. விவசாயிகளின் பங்களிப்புடன் தீவிரமாக நடைபெற்றுவரும் தூர்வாரும் பணி 10 விழுக்காடு நிறைவடைந்துள்ளது. மன்னார்பாளையம் அருகிலுள்ள திருமணிமுத்தாறு தொடக்கப் பகுதியில் நடந்து வரும் இப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ராமன் இன்று காலை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஏரிகள் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் - ஏரிகள் தூர்வாரும் பணி
சேலம்: 5 கோடி ரூபாய் மதிப்பில் 20 ஏரிகள் குடிமராமத்து திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ராமன் பார்வையிட்டார்.
அப்பொழுது திரளான விவசாயிகள் அங்கு வந்து குடி மராமத்து பணிக்கு பாராட்டு தெரிவித்தனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் ராமன் விவசாயிகளுடன் திருமணிமுத்தாற்றில் நடந்துசென்று முட்செடிகள் அகற்றப்பட்டு உள்ளதையும் மண் அகற்றப்பட்டுள்ளதையும் பார்வையிட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது "ரூ.5 கோடியே 63 லட்சம் மதிப்பில் 20 ஏரிகளை தூர்வாரும் பணிகள் நடந்துவருகிறது. இப்பணிகளை அப்பகுதியில் உள்ள விவசாய சங்கங்களுடன் இணைந்து செய்துவருகிறோம். பணிகள் அனைத்தும் ஆகஸ்ட் 15க்குள் முடிவடைந்துவிடும். இதன் மூலம் மழைக்காலங்களில் பெய்யும் மழை நீரை ஏரிகளில் தேக்கி அப்பகுதி விவசாயிகள் பயன்படுத்துவதற்கு வசதியாக இருக்கும். மேட்டூர் அணையில் மணல் திருடுபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது "என்றார்.