சேலம் மாநகர் பகுதியில் முள்ளுவாடி ரயில்வே கேட் பகுதியில் மேம்பால பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த பகுதியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள அம்பேத்கர் சிலைக்கு அவரது பிறந்த நாள், நினைவு நாள் அன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அம்பேத்கர் இயக்கங்கள், இடதுசாரி இயக்கத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவர்.
இதனிடையே, மேம்பால பணிக்காக அம்பேத்கர் சிலை அகற்றப்பட உள்ளதாக தகவல் பரவியது. இதையடுத்து, நேற்று (ஜூன் 13) சேலம் மாவட்ட அம்பேத்கர் மக்கள் பேரவை மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அம்பேத்கர் சிலையை அகற்ற வேண்டாம் என்று வலியுறுத்தி மனு அளித்தனர்.
மேலும் தங்களிடம் கலந்து ஆலோசித்த பிறகே சிலை அகற்றம் குறித்து அரசு முடிவெடுக்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
’அம்பேத்கர் சிலையை அகற்றக் கூடாது’ - விசிக கோரிக்கை
சேலம்: அம்பேத்கர் சிலையை அகற்றக் கூடாது என்று வலியுறுத்தி சேலம் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரதிநிதிகள், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சேலம் மாவட்ட செயலாளர் ஜெயசந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "முதலமைச்சர் கனிவோடு எங்களது கோரிக்கையை ஏற்றுக் கொண்டுள்ளார். சிலை அகற்றம் என்பது இல்லை. மாற்று ஏற்பாடு என்ன என்பது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர்களிடமும் கலந்து ஆலோசித்து அரசு முடிவெடுக்கும். மேலும் கனிவுடன் எங்களது கோரிக்கையை ஏற்ற முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:’6 ஆண்டுகளாக தெலங்கானா முதலமைச்சர் குவாரன்டைனில் இருக்கிறார்’ - காங்கிரஸ் எம்எல்ஏ சாடல்