சேலம்:சேலத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும்போது, “20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் ஆயுள் கைதிகளை சாதி மத வழக்கு பேதம் இன்றி முன் விடுதலை செய்ய வேண்டும் என்பதை முன்னெடுத்து வருகிறோம்.
36 முஸ்லிம் சிறைவாசிகள் உள்பட அனைவரின் விடுதலை சாத்தியப்படுத்தித் தரக் கோரியும், அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு அவர்களுடைய விடுதலையை உறுதிபடுத்துங்கள் என தமிழ்நாடு முதலமைச்சரிடம் தெரிவித்து இருந்தோம். ஆனால், தமிழ்நாடு அரசு அது குறித்து சேவி சாய்க்கவில்லை.
அதற்கான ஆதிநாராயணன் குழு குறித்தும் எந்த விளக்கமும் தெரிவிக்கப்படவில்லை. இது எங்களுக்கு ஏமாற்றம் அளித்தது. இது குறித்து நாங்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைகளை முற்றுகையிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
161வது விதிகளின் படி இவர்களுக்கான தீர்மானத்தை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப வேண்டும் ஆளுநர் முடிவு எடுக்க மாட்டார். இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் சட்டரீதியாக உச்ச நீதிமன்றத்தில் வாதாடி வெற்றி பெற உதவியாக இருக்கும். 161வது விதியினை அமைச்சரவையில் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினோம். இந்த சிக்கல் முடியும் வரை பேரறிவாளனுக்கு வழங்கியது போன்ற நீண்ட விடுப்பு வழங்க வேண்டும். என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சட்டமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் வைத்துள்ள அனைத்து கட்சிகளையும் சந்தித்து வருகிறோம்.