சேலம்:தாட்கோ அலுவலகத்தில் மாவட்டம் முழுவதும் உள்ள ஆதிதிராவிடர் வகுப்பு மக்களுக்கு, கடன் சலுகைகள் மற்றும் கடன் தொகை மானியம் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. பொருளாதாரத்தில் மிகவும் அடித்தட்டு நிலையில் உள்ள ஆதி திராவிடர் தொழில் முனைவோர் மற்றும் விவசாயிகள் பொருளாதார நிலையை மேம்படுத்திக் கொள்வதற்காக பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளன.
ஆதி திராவிட மக்களின் ஒரே பொருளாதார ஆதாரமாக விளங்கும் தாட்கோ நிறுவனம் மூலம் சேலம் மாவட்டத்தில் பல ஆயிரம் ஆதிதிராவிட மக்கள் பயன் அடைந்து வருகின்றனர். இந்த நிலையில், சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையம் மணியார்குண்டம் பகுதியைச் சேர்ந்த குமார் என்பவர், தாட்கோ மூலம் டிராக்டர் வாங்க கடந்த 10 நாட்களுக்கு முன்பு தாட்கோ மாவட்ட மேலாளரைத் தொடர்பு கொண்டு விண்ணப்பித்து உள்ளார்.
அதனைத் தொடர்ந்து குமாரிடம் நேர்காணல் செய்யப்பட்டு உள்ளது. பின், ரூபாய் 7.50 லட்சம் மதிப்பிலான கடனுக்கு, 50 சதவீதம் மானியம் வழங்குவதற்காக ரூபாய் 15 ஆயிரம் லஞ்சமாக வழங்க வேண்டும் என மாவட்ட மேலாளர் (பொறுப்பு) சாந்தி குமாரிடம் வற்புறுத்தி உள்ளார். அதிர்ச்சி அடைந்த குமார் லஞ்சம் கொடுக்க விரும்பவில்லை என்று கூறி உள்ளார். பின் லஞ்சம் கொடுக்க விரும்பாத குமார், இந்த சம்பவம் குறித்து சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறையிடம் புகார் அளித்தார்.