சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே ‘தமிழர் வேலை தமிழருக்கே’ என்ற தலைப்பில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் சார்பில் நேற்றிரவு மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் குடும்பம் குடும்பமாக பல்வேறு மாவட்டங்களிலிருந்து வாகனங்களில் வந்து கலந்துகொண்டனர். மாநாடு நேற்று (பிப்.1) மாலை 6 மணிக்கு தொடங்கி, இரவு 9.45 மணி வரை நடைபெற்றது. இதையடுத்து மாநாட்டிற்கு வந்தவர்கள், தாங்கள் வந்த வாகனங்களில் மீண்டும் ஊருக்கு திரும்பினர். மாநாட்டிற்கு வந்த வாகனங்களுக்கு, தலைவாசல், தொப்பூர், மேட்டுப்பட்டி ஆகிய மூன்று சுங்கச் சாவடிகளிலும் சுங்கக் கட்டணம் வசூலிக்காமலே அனுப்பப்பட்டன.
இந்நிலையில், சேலத்திலிருந்து தலைவாசல் வழியே கடலூருக்கு சென்ற தொண்டர்களின் வாகனங்கள் சுங்கச்சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டது. இதனால் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர், சுங்கச்சாவடி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றவே வாகனத்தில் இருந்தவர்கள் இறங்கி வந்து சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கினர். ஊழியர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.