சேலம் அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் நேற்று (மே. 29) இரவு ஆய்வு மேற்கொண்டார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், "தமிழ்நாட்டில் கரோனா தொற்று, தற்போது குறையத் தொடங்கியுள்ளது. முழு ஊரடங்கை கடைப்பிடித்து பொதுமக்கள் முழுமையாக ஒத்துழைப்புத் தர வேண்டும்.
கேரளாவில் நோய் அறிகுறி வந்தவுடன் மருத்துவர்களைச் சந்தித்து சிகிச்சைப்பெற்று வருகின்றனர். தமிழ்நாட்டில் நாளொன்றுக்கு 486 பேர் உயிரிழக்கின்றனர். இதனை ஆய்வு செய்யும்போது, பலர் கடைசி நேரத்தில் சிகிச்சைக்கு வருவதால், நுரையீரல் அதிகப் பாதிப்புக்குள்ளாகி இறப்பது தெரியவந்துள்ளது.
சுகாதாரத்துறைச்செயலர் ராதாகிருஷ்ணன் பேட்டி... எனவே, பொதுமக்கள் சந்தேகம் வந்தவுடன் சிகிச்சைப் பெற ஆரம்பித்துவிட வேண்டும். நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ளவர்கள் வெளியே வருவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், மாநகர காவல் ஆணையர்கள் மூலம் கண்காணிப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சேலத்தில் பரிசோதனை ஆய்வகத்தில் பணியாற்றும் மூன்று பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் முடிவுகள் அறிவிப்பதில் தாமதமாகியுள்ளது.
எனவே, கரோனா தொற்று எண்ணிக்கை இரட்டிப்பாகத் தெரிகிறது. கரோனா பரிசோதனை நிலையங்களைப் பொறுத்தவரையில் மாநில அளவில் இரண்டு லட்சம் பேருக்குப் பரிசோதனை செய்யும் திறன் உள்ளது. இதில் சுமார் 90 விழுக்காடு முடிவுகளை விரைந்து அறிவிக்கிறோம்.
ஆய்வகங்களில் பணிபுரிவோருக்கு கரோனா தொற்று போன்ற பல்வேறு காரணங்களால் 10 விழுக்காடு அளவுக்கு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படுகிறது. கரோனா தொற்று உலகளாவிய நோயாகும். அடுத்து 3ஆவது, 4ஆவது அலைகளை எதிர்கொள்ள மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம்.
தமிழ்நாட்டில் குறிப்பாக மேற்கு மாவட்டங்களில் சில தொழில்களுக்கு அனுமதி வழங்கியதால் நோய்ப்பரவல் அதிகரித்துள்ளது. அனுமதிக்கப்படாத பணிகளும் நடைபெற்றுவந்தன. இதனால் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் தொற்று அதிகமாக உள்ளது.
எனவே, இரண்டு மாவட்டங்களில் போதிய கண்காணிப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். கரோனா குறைந்துவரும் மாவட்டங்களில்கூட கண்காணிப்புடன் இருக்க கவனம் செலுத்தி வருகிறோம். திருமணம், இறப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் அதிகமாகப் பங்கேற்பவர்களால், நோய்த்தொற்று அதிகம் பரவுகிறது.
சேலத்தில் தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக ஏராளமான புகார்கள் வந்துள்ளன. இதனையடுத்து மாவட்டத்தின் புறநகர்ப் பகுதியில் கண்காணிப்புக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதுபோன்ற செயலில் ஈடுபடும் மருத்துவமனைகளை மூட நடவடிக்கை எடுக்கும் சூழல் வரும். சில தனியார் மருத்துவமனைகளின் செயல் மனிதாபிமானற்றவையாக உள்ளது. பணம் சம்பாதிக்கும் நோக்கில் தனியார் மருத்துவமனைகள் செயல்படக்கூடாது.
18 முதல் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குச் செலுத்த வழங்கப்பட்ட 13. 1 லட்சம் தடுப்பூசிகள் அடுத்த இரண்டு நாள்களில் முடியும் நிலை உள்ளது. மத்திய அரசிடம் கூடுதலாக தடுப்பூசி வழங்க கேட்டுள்ளோம். கரோனா இறப்பு குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் " என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:மூன்று மாவட்டங்களில் முதலமைச்சர் இன்று ஆய்வு!