நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சி குறித்து டிச31ஆம் தேதி அறிவிப்பதாக தெரிவித்திருந்த நிலையில் அவருக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால், தாம் கட்சி ஆரம்பிக்கப்போவது இல்லை என்று மூன்று பக்க அறிக்கையை டிச.29ஆம் தேதி வெளியிட்டு ரசிகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு இத்தகைய முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார். அதில், கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதை அறிவிக்கும்போது எனக்கு ஏற்பட்ட வலி, எனக்கு மட்டும்தான் தெரியும். இந்த முடிவு ரஜினி மக்கள் மன்றத்தினருக்கும், நான் கட்சி ஆரம்பிப்பேன் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கும், மக்களுக்கும் ஏமாற்றத்தை அளிக்கும். என்னை மன்னியுங்கள்' என கூறியிருந்தார். ரஜினியின் இந்த திடீர் முடிவால் அவரது சில ரசிகர்களை ஆத்திரமடைந்தனர். மேலும் சிலர் அவரது வீட்டின் முன் திரண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என வலியுறுத்தி, ரஜினியின் வீடு முன்பு அவரது ரசிகர் ஒருவர் ஜன ஒன்றாம் தேதி தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ரஜினி ரசிகர்களின் அறவழி அரசியல்
நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபட வேண்டும் என்றும் தனிக்கட்சி தொடங்கி தேர்தலை சந்தித்து வெற்றி பெற்று தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி சேலம் ரஜினிகாந்த் ரசிகர்கள் அறவழி அரசியல் அழைப்பு போராட்டம் நடத்தினர். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற இந்த அறவழிப் போராட்டத்தில் 20க்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்துகொண்டனர்.