தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் பேட்டி சேலம்: தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும், பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "தமிழகத்தில் நீண்ட ஆண்டுகளாக சிறையில் உள்ள இஸ்லாமியர்கள் மற்றும் 10 ஆண்டுகளுக்கு மேலான சிறைவாசிகள் ஆகியோரை, கருணை அடிப்படையில் தமிழக அரசு விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகின்ற 20ஆம் தேதி சென்னையில் மாலை 4 மணி அளவில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்காமல், தமிழ்நாடு அரசின் சட்ட முன் வடிவங்களை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று கூறி, இங்கு இருக்கும் ஆளுநரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.
ஒரு நிமிடம் கூட தமிழக ஆளுநராக இருக்க தகுதி இல்லாதவர் ரவி. அவரை உடனடியாக திரும்ப பெற வேண்டும் அல்லது டிஸ்மிஸ் செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக, பரவிய ஒரு வதந்தியான வீடியோவை நம்பி, அதற்கு பதறிப் போய் மத்திய அரசு குழுவை அமைக்கிறது.
அதற்கு மாநில அரசு பதில் சொல்லும் ஒரு அவல நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் முதல் காவல் துறை அதிகாரிகள் வரை வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்று தினமும் பேட்டி தருகிறார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள ஒரு இறையாண்மை உள்ள அரசை அவமானப்படுத்துகிறார்கள்.
எல்லாவற்றுக்கும் மேலே போய் சேலம் மாவட்ட ஆட்சியர் வட மாநில தொழிலாளருக்கு இனிப்புகளை ஊட்டி விடுகிறார். என்றைக்காவது அவர், ஒரு மலம் அள்ளும், சாக்கடை அள்ளும் ஏழைத் தொழிலாளிக்கு ஒரு கேக் ஊட்டி விட்டிருப்பாரா?. அப்படிப்பட்ட தேவை என்ன? பீகார் அரசிற்கு ஏன் நல்லவர்களாக தமிழக அரசு நடந்து கொள்ள வேண்டும்.
தமிழ் நாட்டில் நிலம் பெரும்பகுதி அளவு மார்வாடி சேட்டு ஜெயின் கைகளுக்கு சென்று விட்டது. வெள்ளி, தங்கம், வைரம், ஜவுளி, வணிகம் உள்பட பல்வேறு துறைகள் வட இந்தியர்கள் கைகளுக்கு சென்று விட்டன. வணிகப் பகுதிகளில் தமிழ் இல்லை. தமிழைத் தேட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கு எல்லாம் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழை, தமிழரை மாநில அரசு பாதுகாக்க வேண்டும். அந்தந்த மாநில மக்களுக்கு அவர்களின் சொந்த ஊர்களிலும் வேலை வழங்கிட மத்திய மற்றும் மாநில அரசுகள் முன் வர வேண்டும். தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி சமூக நீதி வழங்க வலியுறுத்தி வருகிற 26 ஆம் தேதி சேலம் மாவட்டம் கொளத்தூரில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறும்.
அனைத்து தமிழ்ச் சாதியினரும் சிக்கல் இன்றி இட ஒதுக்கீடு சலுகைகள் பெற சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கூறினார். பேட்டியின் போது தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில மகளிர் அணி செயலாளர் முத்துலட்சுமி மற்றும் சேலம் தமிழக வாழ்வுரிமை கட்சி பிரமுகர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க:திருச்சி சிவா - கே.என்.நேரு ஆதரவாளார்கள் மோதல்: காவல் நிலையம் சூறையாடல்; பெண் காவலர் காயம்!