சேலம்:கெங்கவல்லி அடுத்த சிறுவாச்சூர் பகுதியில் நடைபெற்ற கிராமியப் பொங்கல் விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். ஏறத்தாழ 70-க்கும் மேற்பட்ட பானைகளில் பொங்கல் வைத்து கிராம மக்கள் மற்றும் அதிமுகவினர் உற்சாகமாக பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.
விழாவில் கலந்து கொண்டு கிராம மக்கள் மற்றும் அதிமுகவினர் முன்னிலையில் பொங்கல் வைத்து எடப்பாடி பழனிசாமி வழிபாடு நடத்தினார். தொடர்ந்து உரையாற்றிய அவர், "தை பிறந்தால் வழி பிறக்கும். தை பிறந்துவிட்டது. அதிமுகவிற்கு வழி பிறந்து விட்டது. இது போன்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்போது என் மனதில் ஒரு மகிழ்ச்சி பிறக்கிறது.
நானும் விவசாயி:நானும் ஒரு விவசாயி. விவசாயப் பெருமக்களோடு கலந்து கொண்டு மாட்டுப் பொங்கல் கொண்டாடியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழக மக்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள். நாட்டிற்கு உணவளிக்கும் விவசாயிகளின் விழாவில் கலந்து கொண்டுள்ளேன். விவசாயப் பணி என்பது சாதாரண பணி கிடையாது. கடுமையான பணி. ரத்தத்தை வேர்வையாக மண்ணில் சிந்தி உழைப்பவர்கள் விவசாயிகள்.
சிறுவாச்சூர் ஏரி அமைக்கும் திட்டம் கடந்த அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது திமுக ஆட்சியில் அது கிடப்பில் போடப்பட்டு உள்ளது. மீண்டும் அதிமுக ஆட்சி அமையும். அப்போது இந்த திட்டம் நிறைவேற்றப்படும். விவசாயிகளுக்கான எந்த திட்டத்தையும் இந்த அரசு கொண்டு வரவில்லை.
விவசாய பயிர்க்கடன் தள்ளுபடி:அதிமுக ஆட்சியில் குளம், குட்டைகள் தூர்வாரி குடிமராமரத்து திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தினோம். பருவ மழைக்காலங்களில் பெய்யக் கூடிய நீர், ஏரி குளங்களில் சேகரிக்கப்படுகிறது. அதனை முறையாக பயன்படுத்தினால் விவசாயம் செழிக்கும். விவசாயிகளுக்கான காப்பீடு திட்டத்தைக் கொண்டு வந்தது அதிமுக அரசு. கூட்டுறவு வங்கிகளில், விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன்களை இரண்டு முறை தள்ளுபடி செய்தது, அதிமுக அரசு.