சேலம்: தமிழ்நாடு - கர்நாடக எல்லையான பாலாறு, காரைக்காடு, கோவிந்தபாடி, செட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதி மீனவர் மற்றும் பொதுமக்கள் மீது கர்நாடக வனத்துறை அத்துமீறி தாக்குதல் நடத்தியதில், கடந்த 2014ஆம் ஆண்டு செட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பழனி என்பவர் உயிரிழந்தார். அதேபோல, கடந்த பிப்ரவரி மாதம் காரைக்காடு பகுதியைச் சேர்ந்த மீனவர் ராஜா, அடிப்பாலாறு காவிரி ஆற்றில் மீன் பிடிக்க சென்றபோது துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்தார். அவர் மான் வேட்டையாடியதாக கூறி கர்நாடக வனத்துறையினர் சுட்டுக் கொன்றதாக கூறப்படுகிறது.
ஆனால்,அதனை அம்மாநில வனத்துறை மற்றும் போலீசார் மறுத்தனர். இந்தச் சம்பவங்களால் இருமாநில எல்லைப் பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. தொடர்ந்து கர்நாடக வனத்துறையால் பதற்றம் ஏற்படுவதைத் தடுக்க, கர்நாடக மாநிலம், மாதேஸ்வரன் கோயில் வளாகத்தில் வைத்து நடந்த ஆலோசனையில் சாம்ராஜ் நகர் மாவட்ட ஆட்சியர் ராஜா, மாவட்ட கண்காணிப்பாளர் பத்மினிசஹோ, மாவட்ட வன அலுவலர் சந்தோஷ்குமார் ஆகியோருடன் மேட்டூர் பாமக சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் தலைமையில் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
முன்னதாக, கர்நாடக வனத்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் கடந்த 2014-ல் உயிரிழந்த பழனி குடும்பத்திற்கும், கர்நாடக வனத்துறையால் கடந்த மாதம் 14ஆம் தேதி கொல்லப்பட்ட செட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த ராஜா குடும்பத்திற்கும் கர்நாடக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை, மாதேஸ்வரன் கோயிலுக்கு வந்த, கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மையை, சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் நேரில் சந்தித்து வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் தலைமையில் தமிழ்நாடு - கர்நாடக அரசு அதிகாரிகள் கலந்து கொண்ட அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் தமிழ்நாடு எல்லையான பாலாறு, செட்டிப்பட்டி, கோவிந்தபாடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மீனவர்களையும், பொதுமக்களையும் கர்நாடக வனத்துறை தொடர்ந்து அத்துமீறி தாக்குவதும், துப்பாக்கியால் சுடுவதும், மீனவர்களின் வலையை அறுத்து செல்வதும் தொடர்கதையாகி வருகிறது.