தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

MK Stalin: சேலத்தில் சுற்றுப்பயணம்.. ஓமலூர் தாசில்தார் அலுவலகத்தில் ஆய்வு!

'கள ஆய்வில் முதலமைச்சர்' திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் திடீர் ஆய்வு செய்தார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Feb 15, 2023, 12:36 PM IST

சேலம்:‘‘கள ஆய்வில் முதலமைச்சர்’’ என்ற திட்டத்தைக் கடந்த 1ஆம் தேதி தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின், முதற்கட்டமாக வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிலையில் இரண்டாம் கட்டமாக நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஆகிய மாவட்டங்களில் வளர்ச்சி பணிகள் குறித்தும், புதிய திட்டத்தின் செயல் குறித்தும் ஆலோசனை மேற்கொள்வதற்காகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இன்று (பிப். 15) சேலத்திற்கு வருகை புரிந்தார்.

சென்னையிலிருந்து தனி விமான மூலம் சேலம் விமான நிலையத்திற்கு வருகை புரிந்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் சார்பில் பிரம்மாண்டமான வரவேற்பு கொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து, அவர்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.

கள ஆய்வில் முதலமைச்சர்: காலை 10:30 மணி அளவில், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் நாமக்கல் மாவட்ட தொழில் துறையினர் மற்றும் விவசாயிகளைச் சந்தித்துப் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயன்பெற்று வரும் கல்லூரி மாணவர்களைச் சந்தித்துப் பேசினார். இதனைத் தொடர்ந்து மாலை 5 மணிக்கு நடைபெற உள்ள சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் நாமக்கல் மாவட்ட சட்ட ஒழுங்கு ஆய்வு கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொள்ள உள்ளார்.

பின்னர், நாளை (பிப். 16) காலையில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

மேலும் அந்தந்த மாவட்டங்களில் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் நிலை குறித்தும், அந்தந்த மாவட்டங்களில் வளர்ச்சிக்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்து, பின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியினை தொடங்கி வைத்துப் பார்வையிட உள்ளார்.

இதனைத் தொடர்ந்து முதல்வர் வருகையை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றிலும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு ஆட்சியர் அலுவலகம் முழுவதும் காவல்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் முதலமைச்சர் ஸ்டாலின் திடீர் கள ஆய்வு மேற்கொள்ளலாம் என்பதால் மாநகரின் பல்வேறு பகுதிகளில் சிதலமடைந்த சாலைகள் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருகிறது.

மேலும் ஆங்காங்கே பணியாற்றக்கூடிய அரசு அலுவலர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். சேலம் மாநகர் முழுவதும் 1500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் முதலமைச்சர் ஸ்டாலின் மணக்காடு பகுதியில் உள்ள அரசு பள்ளியில் செயல்பட்டு வரும் காலை உணவு திட்டத்தைச் சென்று பார்வையிட உள்ளார். அதனை தொடர்ந்து காவல் நிலையம் மற்றும் நியாய விலை கடைக்கு சென்று பார்வையிட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: 75,000 வாக்குகள் வித்தியாசத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவனின் வெற்றி - அமைச்சர் துரைமுருகன் நம்பிக்கை!

ABOUT THE AUTHOR

...view details