ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியின் கருமுட்டைகள் தனியார் மருத்துவமனைகள் மூலமாக விற்பனை செய்யப்பட்டன. இந்த விவகாரம் தொடர்பான புகாரின்பேரில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அவரது இரண்டாவது கணவர், இவர்களுக்கு உடந்தையாக இருந்த பெண், ஆதார் அட்டை மோசடிக்கு உதவிய நபர் உள்பட நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
சிறுமியின் கருமுட்டையை எடுத்ததாக கூறப்பட்ட ஈரோடு, சேலம், ஓசூர் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சென்னை மருத்துவ இயக்குநரக இணை இயக்குநர் விஸ்வநாதன் தலைமையில், மருத்துவத் துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின் அடிப்படையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் சட்டத்திற்குப் புறம்பாக விதிமுறைகளை மீறி சிறுமியின் கருமுட்டை எடுத்தது உறுதி செய்யப்பட்டது. மேலும் திருமணமான 21 வயது முதல் 35 வரை உள்ள பெண்களிடம் கருமுட்டையை தானமாக பெறலாம் என்ற விதிமுறைகள் மீறப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து இந்த விவகாரத்தில் ஈடுபட்ட மருத்துவமனைகள் சீல் வைக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் நேற்று (ஜூலை 14) தெரிவித்திருந்தார். இதனையடுத்து இன்று (ஜூலை 15) விதிமுறைகளை மீறி சிறுமியின் கருமுட்டையை எடுத்த ஈரோடு, பெருந்துறையிலுள்ள மருத்துவமனையிலுள்ள ஸ்கேன் சென்டருக்கு சீல் வைக்கப்பட்டது.
செய்தியாளர்களைச் சந்தித்த நெடுமாறன் இதனைத் தொடர்ந்து சேலம் புதிய பேருந்து நிலையம் அருகேவுள்ள சுதா மருத்துவமனைக்கு சேலம் மருத்துவ பணிகள் இணை இயக்குநர் நெடுமாறன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் சென்று மருத்துவமனையிலுள்ள ஸ்கேன் சென்டருக்கு சீல் வைத்தனர்.
மேலும், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் நோயாளிகள் 15 நாள்களுக்குள் வெளியேற்றிய பிறகு சிகிச்சை மையத்தினை சீல் வைக்கவுள்ளதாக மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் நெடுமாறன் தெரிவித்தார்.
இதையும் படிங்க:கடையநல்லூர் அருகில் தோட்டத்தில் மனித எலும்புக்கூடு.. காவல் துறையினர் விசாரணை!