சேலம்:சிறு, குறு நடுத்தர தொழில் வளர்ச்சி மைய கவுன்சிலின் பண மோசடி வழக்கு தொடர்பாக, நடிகை நமீதாவின் கணவர் மற்றும் பாஜக நிர்வாகி ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், தங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்பதால், குணமடைந்த பிறகு விசாரணைக்கு ஆஜராவதாக வழக்கறிஞர் மூலம் போலீசாருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
சேலம் மாவட்டம், சூரமங்கலம் ஜாகீர் அம்மாபாளையத்தைச் சேர்ந்தவர், கோபால்சாமி (45). இவர் தனியார் நிறுவனத்தில் நிர்வாக இயக்குநராகப் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், நண்பர் ஒருவர் மூலம் சிறு, குறு நடுத்தர தொழில் வளர்ச்சி மைய கவுன்சிலின் அகில இந்தியத் தலைவர் என கூறிய மதுரை உசிலம்பட்டியைச் சேர்ந்த முத்துராமன் மற்றும் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த துஷ்யந்த் யாதவ் ஆகியோரிடம் சிறு, குறு, நடுத்தர தொழில் வளர்ச்சி மையத்தின் தமிழக தலைவராகப் பதவி பெற்றுத் தர கேட்டுள்ளார்.
மேலும், அந்த பதவிக்காக இரு தவணைகளாக ரூ.50 லட்சத்தை அவர்களிடம் வழங்கியுள்ளார். இதனையடுத்து, முத்துராமன் மற்றும் துஷ்யந்த் யாதவ் ஆகியோர் கூறியபடி, அரசு பதவியை வாங்கித் தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இதற்கிடையில், நடிகை நமீதாவின் கணவர் சவுத்ரியிடம் ரூ.4 கோடி பெற்றுக் கொண்டு, அந்த பதவியை சவுத்ரிக்கு வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து, பதவிக்காக முத்துராமன் மற்றும் துஷ்யந்த் யாதவ் ஆகியோரிடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதற்கு ரூ.9 லட்சம் மட்டும் கொடுத்துள்ளனர். ஏமாற்றம் அடைந்த கோபால்சாமி, இது குறித்து சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில், முத்துராமன் மற்றும் அவரது நண்பர் துஷ்யந்த் யாதவ் ஆகியோர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சூரமங்கலம் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து, பண மோசடி விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு, சிறு குறு நடுத்தர தொழில் வளர்ச்சி மைய கவுன்சலின் தமிழகத் தலைவரான நடிகை நமீதாவின் கணவர் சௌத்ரி, பாஜக ஊடகப்பிரிவு மாநிலச் செயலாளர் மஞ்சுநாத் ஆகிய இருவருக்கும் போலீஸ் தரப்பிலிருந்து சம்மன் அனுப்பப்பட்டது.
கடந்த செவ்வாய்க்கிழமை நேரில் ஆஜராக சம்மன் அனுப்பிய நிலையில், இருவரும் விசாரணைக்கு ஆஜராகாமல், தங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்பதால், குணமடைந்த பிறகு விசாரணைக்கு ஆஜராவதாக தங்களது வழக்கறிஞர் மூலம் போலீசாருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். இதற்கிடையில், பாஜக ஊடகப்பிரிவுச் செயலாளர் பதவியிலிருந்து மஞ்சுநாத் நீக்கப்பட்டிருக்கிறார். இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை மத்தியக் குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:டெட்ரா பாக்கெட் மதுபானம்; நன்மை, தீமைகளை ஆய்வு செய்ய நிபுணர் குழு - உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் தரப்பு வாதம்!