ஆத்தூர் நகர காவல் நிலையம் முன்பு இளைஞர் ஒருவர், கத்தியால் தனது கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆத்தூர் நகர காவல் துறையினர், அவரை உடனடியாக மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
சேலம் குரங்குச்சாவடியைச் சேர்ந்தவர்கள் தங்கராஜ், ஜமுனா ராணி தம்பதியினர். திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகும் இவர்களுக்கு, சிவக்குமார் (8), பிரவீன் குமார் (5) என இரண்டு மகன்கள் உள்ளனர்.
தங்கராஜ் மனநிலைப் பாதிக்கப்பட்டவர் போல் அடிக்கடி தகராறில் ஈடுபடுவார் என்று கூறப்படுகிறது. இதனால் கடந்த சில ஆண்டுகளாக தம்பதியினர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, ஜமுனா ராணி தனது தாய் வீட்டில், மகன்களுடன் வசித்து வருகிறார்.
தற்கொலைக்கு முயன்ற இளைஞர் இந்நிலையில் நேற்று மாலை சேலத்திலிருந்து மனைவி வீட்டுக்கு தங்கராஜ் வந்துள்ளார். இதையடுத்து ஆத்தூர் கடைவீதியில் உள்ள நகர காவல் நிலையம் முன்பு நின்று தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், தனது கழுத்தை தாறுமாறாக அறுத்துக் கொண்டு, தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஆத்தூர் நகர காவல் துறையினர், அவரை மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் .
பின்னர், முதலுதவி செய்த மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு, ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர் . அங்கு அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: யாரும் வந்து பார்க்காததால் தற்கொலை செய்துகொண்ட சிறைக்கைதி!