மீன் வளர்க்கும் விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ள மானியம் குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சேலம் மாவட்ட மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் தங்களது மீன் பண்ணைகளை பதிவு செய்து மீன் வளர்த்து வரும் விவசாயிகளுக்கு, மீன் குஞ்சுகள், மீன் தீவனம் உள்ளிட்ட இடுபொருள்களுக்கு, தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம் - 2020-21இன் கீழ், 50 சதவிகிதத்தில் உள்ளீட்டு மானியம் வழங்கும் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இத்திட்டத்தின்படி நன்னீர் மீன் வளர்ப்பு இடுபொருள் 1.50 லட்சம் ரூபாயில், 50 விழுக்காடு அதாவது 75 ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர், கடந்த மூன்று ஆண்டுகளில் இது போன்ற திட்டத்தில் மீன் வளத்துறையினரிடமிருந்தோ அல்லது பிற துறையினரிடமிருந்தோ பயன்பெற்றிருக்கக் கூடாது.
ஒருவருக்கு அதிகபட்சமாக இரண்டு ஹெக்டேருக்கு மட்டுமே மானியம் வழங்கப்படும். மீன்வளர்ப்போர், இந்தியப் பெரு ரக கெண்டை இனங்களான கட்லா, ரோகு, மிர்கால், சாதா கெண்டை, புல் கெண்டை ஆகிய மீன் இனங்களை மட்டுமே பிரதானமாக வளர்க்க வேண்டும்.