சேலம்:எடப்பாடி அருகே கல்வடங்கம் காவிரி ஆற்றில் குளிப்பதற்காக, எடப்பாடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.ஏ.தமிழ் மூன்றாம் ஆண்டு படிக்கும், பத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சென்றுள்ளனர். அப்போது, அவர்கள் அனைவரும் ஆற்றின் உள்ளே சென்று தண்ணீரில் நீந்தி விளையாடி உள்ளனர்.
திடீரென அதில் குளித்துக்கொண்டிருந்த நான்கு மாணவர்கள் நீரில் மூழ்கியுள்ளனர். அவர்களைக் காப்பாற்ற பிற மாணவர்கள் முயன்ற நிலையில், அவர்களைக் காப்பாற்ற முடியாதுபோகவே, மற்ற மாணவர்கள் பதறி வெளியில் சென்று அக்கம் பக்கத்தினருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து அந்த பகுதிக்கு வந்த எடப்பாடி தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர், சுமார் 3 மணி நேரம் போராடி மாயமான கல்லூரி மாணவர்களை ஆற்றில் தேடிவந்தனர். இதில், காவிரி ஆற்றில் மூழ்கிய எடப்பாடி அரசு கலை கல்லூரி மாணவர்களான, இளம்பிள்ளை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், கன்னந்தேரி பகுதியைச் சேர்ந்த பாண்டியராஜன், எட்டிகுட்டை மேடு பகுதியைச் சேர்ந்த முத்துசாமி, எருமைப்பட்டி பகுதியைச் சேர்ந்த சேர்ந்த மணிகண்டன் ஆகிய நான்கு பேரும் இறுதியில் சடலங்களாக மீட்கப்பட்டனர்.