சேலம்:சேலம் தாரமங்கலம் செல்லும் சாலையில் அமைந்துள்ள பகுதிகளான சித்தனூர் சேலம் உருக்காலை, அழகுசமுத்திரம் பகுதிகளில் பிளாஸ்டிக் குப்பைகள் குவிந்து காணப்படுகிறன.
இதனால், அப்பகுதியில் பெரும் சுகாதார சீர்கேடு உருவாகியுள்ளது. கடந்த வருடம் ஜனவரி முதல் சேலம் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
பிளாஸ்டிக் பைகளை உபயோகப்படுத்தும் கடைகளுக்கு சீல் வைப்பது, அபராதம் விதிப்பது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை எடுத்த மாவட்ட நிர்வாகம், பிளாஸ்டிக் பயன்பாடு அறவே ஒழிக்கப்பட்டதாக தெரிவித்தது.
ஆனால், பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்ததுபோல் தெரியவில்லை. மாவட்ட நிர்வாகம் தடைவிதித்த 50 மைக்கரான் அளவிலான பிளாஸ்டிக் பைகளை மக்கள் அதிகளவில் பயன்படுத்திவரும் சூழலில் மாவட்ட நிர்வாகம் எடுத்த நடவடிக்கைகள் கேள்விக்குள்ளாகியுள்ளன.
சேலம் மாநகராட்சியில் சேகரிக்கப்படும் பெரும்பாலான குப்பைகள் புதிய பேருந்து நிலையில் அருகேயுள்ள குப்பை சேகரிக்கும் பகுதியில் கொட்டப்படுகிறது.
ஆனால், தற்சமயம் அப்பகுதியில் கொட்டப்படும் குப்பைகள் முறையாக மேலாண்மை செய்யப்படுவதில்லை. அப்பகுதியில் உள்ள குப்பைத் தொட்டிகள் பயன்படுத்தப்படாமல் கவிழ்த்து வைக்கப்பட்டுள்ளது.
குப்பைகளை அவ்வப்போது, சிலர் எரிப்பதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிப்பதோடு அப்பகுதியிலுள்ளவர்களுக்கு சுவாச கேளாறு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட ஏதுவாக அமைகிறது.