சேலம்:ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் மாநில கல்விக்கொள்கை உயர்மட்டக்குழு மண்டல அளவிலான கருத்து கேட்புக் கூட்டம் இன்று (அக்.29) நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன், ' மாநில கல்விக் கொள்கை உயர்மட்டக் குழு 8 மண்டலங்களில் கருத்து கேட்பு கூட்டங்களை நடத்தி வருகிறது. இதில் பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். கருத்து ஏற்கப்படுமா அல்லது நிராகரிக்கப்படுமா என நினைக்காமல், அனைவரும் சுதந்திரமான முறையில் கருத்து தெரிவிக்கலாம்.
சுதந்திரமான முறையில் கருத்து தெரிவித்தால்தான் நல்ல கருத்து வரும். பள்ளிக் கல்வித்துறையில் தான் அதிகளவில் கருத்து பெறப்படுகிறது. கல்லூரிகளில் அதிகம் கருத்துகள் வரவில்லை. மாநில கல்வி கொள்கை உயர்மட்ட குழு கூட்டங்களில் தனியார் கல்வி நிறுவனங்களின் பங்கேற்பு குறைவாக உள்ளது. இதுவரை நடைபெற்ற அனைத்து மண்டல கூட்டங்களிலும் இதே நிலை தான் நீடிக்கிறது என்று தெரிவித்தார்.
தொடர்ந்து சேலம், தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கருத்துகளை தெரிவித்தனர். அப்போது மாணவ மாணவிகள் கூறுகையில்,
- சுற்றுலா அழைத்து செல்ல வேண்டும்.
- வேற்றுமொழி திணிப்பு வேண்டாம்; எங்களுக்கு இந்தி மொழி வேண்டாம்.
- தமிழ், ஆங்கிலம் மொழி போதுமான நிலையில் ஆங்கில மொழி பயிற்சி தர வேண்டும்.
- விளையாட்டுக்கென தனிப்பாடம் வேண்டும்.
- விவசாயம் குறித்து ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை பாடம் கற்றுத்தர வேண்டும்.
- 6 ஆம் வகுப்பு படிக்கும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி தர வேண்டும்.
- 6 ஆம் வகுப்பு முதல் கணினி பயிற்சி வேண்டும்.
- பெண்களுக்கு கழிப்பறை வசதியும், நாப்கின் மற்றும் நாப்கின் இயந்திரம் வழங்க வேண்டும்.
- பதினொன்றாம் வகுப்பு, பன்னிரெண்டாம் மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்க வேண்டும்.
- நிர்வாக அலுவல் ரீதியான பணிகளை மேற்கொள்வதால் முக்கிய பாடங்களுக்கான வகுப்புகளை எடுக்க முடியாமல் ஆசிரியர்கள் உள்ளனர். இதனால் மாணவ, மாணவிகளின் கற்றல் திறன் பாதிக்கிறது என்றனர்.
- மலைக்கிராமங்களில் பேருந்து வசதி வேண்டும்.
- ஆசிரியர் பணிகளை நிரப்ப வேண்டும்.
- யோகா மற்றும் தியானங்களுக்கு பாடத்திட்டம் கொண்டு வர வேண்டும்.
- ரோபோடிக்ஸ், செயற்கை நுண்ணறிவு குறித்து பயிற்சி அளிக்க வேண்டும்.
- மன அழுத்தம் குறைய நீதி, போதனை வகுப்பு வேண்டும் உள்ளிட்ட கருத்துகளைத் தெரிவித்தனர்.
'நீட் தேர்வு வேண்டுமா?' என நீதிபதி முருகேசன் மாணவியிடம் கேட்டார். அப்போது தகுந்த முறையில் படித்து மதிப்பெண் பெற்றால்தான் தகுதியானவர்கள் மருத்துவப் படிப்புக்கு செல்ல முடியும். நீட் தகுதி தேர்வு வேண்டும் என பதிலளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.