சேலம் மாவட்டம், அஸ்தம்பட்டியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் குறித்து இன்று (டிச.03) முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவருடன் மாவட்ட ஆட்சியர் ராமன் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
ஆய்வுப் பணிகளைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, "சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகமாக உள்ளது. அதனைக் குறைத்திடும் வகையில் நடவடிக்கைகள் எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன். சேலத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் 74 ஆயிரத்து 695 பேருக்கு முதியோர் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.
கருமந்துறை பகுதியில் ஏழு கோடி ரூபாய் மதிப்பில் 1,500 மீட்டர் தூரத்திற்கு கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கியதன் காரணமாக சேலத்தில் 26 மாணவ, மாணவியர்கள் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து பயில உள்ளனர். அகில இந்திய அளவில் சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையம் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.
அதிமுக ஆட்சியில் ஊழல் நடைபெறுவதாக மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுஅவதூறு பரப்பி வருகிறார். 2ஜி அலைக்கற்றை ஊழல் மிகப்பெரியது. அதில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. 2ஜி அலைக்கற்றை வழக்கில் விரைவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிக்குவார். அதிமுக ஆட்சியில் சிறு தவறு கூட நடைபெறாத வகையில் உலக வங்கி விதிமுறைப்படி ஆன்லைன் முறையில் டெண்டர் விடப்பட்டது. திமுக ஆட்சியில் டெண்டர் விடுவதில் 72 விழுக்காடு ஊழல் நடந்துள்ளது.
இதுகுறித்த ஆதாரத்தை விரைவில் நீதிமன்றத்தில் ஒப்படைப்போம். அதிமுக ஆட்சி குறித்து குறைகூறுவதற்கு மு.க.ஸ்டாலின் தகுதி இல்லாதவர். மீத்தேன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை மேற்கொண்டது திமுகதான். அதை அதிமுக தடுத்து நிறுத்தியுள்ளது. டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவித்துள்ளோம். நீர் மேலாண்மையில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.
அதிமுகவின் சிறப்பான ஆட்சி காரணமாக அகில இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. காவிரி ஆற்றின் குறுக்கே 406 கோடி ரூபாய் மதிப்பில் தடுப்பணை கட்டும் பணி விரைவில் தொடங்கப்படும். சேலத்தில் 100 இடங்களில் மினி கிளினிக் தொடங்கப்படும். சேலம், எடப்பாடியில் எந்தத் திட்டமும் செயல்படுத்தப்படவில்லை என கனிமொழி குற்றஞ்சாட்டியுள்ளார். எடப்பாடி தொகுதியில் அரசு கலைக்கல்லூரி, குடிநீர் திட்டங்கள் ஆகியவை நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும் பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
’2ஜி வழக்கில் மு.க. ஸ்டாலின் சிக்குவார்' - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திமுக ஒரு கார்ப்பரேட் கட்சி. திமுகவில் பெரிய தலைவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவில்லை. வேளாண் சட்டங்களால் தமிழ்நாட்டிற்கு எந்தவித பாதிப்பும் கிடையாது. நடப்பாண்டில் 37 லட்சம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகளை அரசு கொள்முதல் செய்துள்ளது. வடமாநிலங்களில் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய எட்டு விழுக்காடு கமிஷன் கொடுக்க வேண்டியுள்ளது. தற்போது வேளாண் சட்டங்கள் அதை மாற்றியுள்ளன. தமிழ்நாட்டில் சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அதற்கேற்ப இட ஒதுக்கீடு வழங்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க: பொதுமக்கள் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி