நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் திருமங்கலம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், இன்று சேலம் நெடுஞ்சாலை நகர் வந்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், காபந்து முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். மேலூர் மற்றும் உசிலம்பட்டி அதிமுக புதிய எம்எல்ஏக்களும் வந்திருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.பி. உதயகுமார், “அதிமுகவுக்கு கிடைத்த தோல்வி குறித்து ஆய்வு செய்து வருகிறோம். கடந்த 10 ஆண்டுகளாக மக்களின் எதிர்பார்ப்பை முழுமையாக அதிமுக அரசு பூர்த்தி செய்யவில்லையோ என்று எங்களுக்கு ஐயம் எழுகிறது. அதனை சரி செய்து கொள்ள புதிய அரசை வழிநடத்தும் வகையில் எதிர்க்கட்சி வரிசையில் மக்கள் அமர வைத்திருக்கிறார்கள்.
அதற்காக தமிழ்நாடு மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். தமிழ்நாடு மக்கள் எங்களை புறக்கணிக்கவில்லை. எல்லா தொகுதியிலும் எங்களுக்கு வாக்குகளை அளித்து இருக்கிறார்கள். சொற்ப வாக்கு வித்தியாசத்தில்தான் அதிமுக தோற்றுள்ளது. தோல்விக்கு எந்த கட்சியையும் நாங்கள் குறை சொல்ல விரும்பவில்லை.