தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிமுகவில் கருப்பு ஆடு யார் என்று ஸ்டாலின் வெளிச்சம்போட்டு காட்டிவிட்டார் - இபிஎஸ் பேச்சு

அதிமுகவில் கருப்பு ஆடு யார் என்று ஸ்டாலின் வெளிச்சம்போட்டு காட்டிவிட்டாதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

அதிமுகவில் கருப்பு ஆடு யார் என்று ஸ்டாலின் வெளிச்சம்போட்டு காட்டிவிட்டார் - இபிஎஸ் பேச்சு
அதிமுகவில் கருப்பு ஆடு யார் என்று ஸ்டாலின் வெளிச்சம்போட்டு காட்டிவிட்டார் - இபிஎஸ் பேச்சு

By

Published : Sep 23, 2022, 11:01 AM IST

சேலம்மாவட்டம் வீரபாண்டி சட்டமன்ற தொகுதி ஆட்டையாம்பட்டியில், புறநகர் மாவட்ட கழகம் சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

புறநகர் மாவட்ட கழகச் செயலாளர் இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பேசிய இபிஎஸ், “அண்ணா பிறந்தநாளை கொண்டாட தகுதி கொண்ட கட்சி அதிமுகதான். எம்ஜிஆர் தனிக்கட்சி தொடங்கியபோது அண்ணா பெயரில் கட்சி தொடங்கினார். ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்ற அண்ணாவின் கொள்கையை நிறைவேற்றியவர், எம்ஜிஆர்தான்.

எம்ஜிஆர் மறைந்தாலும் அவரது சாதனையால் அதிமுக இன்றும் உயிரோட்டம் கொண்ட கட்சியாக உள்ளது. அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு தொண்டர்கள்தான் பிள்ளைகள். இந்த தலைவர்களின் உழைப்பால்தான் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதல் மாநிலமாக உள்ளது.

உயிரோட்டமுள்ள கட்சி அதிமுக. அதனை யாராளும் பிளவுபடுத்த முடியாது. சோதனைகளை சாதனையாக்கியது அதிமுக. ஸ்டாலின் சட்டமன்றத்தில் சட்டையை கிழித்தும் பார்த்தார்; அதிமுகவை எதுவும் செய்ய முடியவில்லை. எடப்பாடி தலைமையிலான ஆட்சி விரைவில் கலைந்துவிடும் என்றார்.

எனது தலைமையிலான ஆட்சியில் அதிக அளவிலான போராட்டம் நடத்தினர். அத்தனைக்கும் அனுமதி தந்தோம். ஆனால் தற்போது மின்கட்டன உயர்வு போராட்டத்திற்கே நடுங்கி போய்விட்டார் ஸ்டாலின். 10 ஆண்டுகளில் எந்த திட்டங்களும் செய்யவில்லை என ஸ்டாலின் பொய் கூறுகிறார்.

தேர்தல் வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றியது அதிமுகதான். 52 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி தந்து சாதனை படைத்தோம். ஆனால் ஸ்டாலின் அதனையும் நிறுத்தி விட்டார். அந்த திட்டத்தை தொடர்ந்து நிறைவேற்ற வேண்டும். காலமும் இளைஞர் சமுதாயமும் உங்களை மன்னிக்காது.

சேலம் மாவட்டத்தில் இரட்டை இலக்கத்தில் வெற்றி பெற்றோம். 44 அமாவாசை நாம் காத்திருக்க வேண்டியது இல்லை. நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் வரும். நான்கு முதலமைச்சருக்கே நாடு தாங்கவில்லை. இன்னும் நிறைய உள்ளதாக ஸ்டாலின் கூறுகிறார்.

நான் தற்காலிக தலைவர் என்கிறார். ஸ்டாலின்போல் தந்தை தயவால் பதவிக்கு வரவில்லை. அதிமுகவில் அனைத்து தொண்டர்களும் பொதுச்செயலாளர்தான். அதிமுகவை பிளவுபடுத்த பார்த்தனர். அதிமுகவில் கருப்பு ஆடு யார் என்று வெளிச்சம்போட்டு காட்டிவிட்டார் ஸ்டாலின்.

அதிமுகவினர் வீடுகளில் சோதனை நடத்துகின்றனர். டெய்லர் ஒருவரிடம் பெட்ரோல் பங்க் உள்ளதா, பேருந்து ஓடுகிறதா என்று கேட்கின்றனர். எதையும் சந்திக்கும் தைரியம் எங்களிடம் உள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் சோதனைகளை சாதனையாக்குவோம்.

எனக்கு முதலமைச்சர் வாய்ப்பு கிடைத்தபோது யாரையும் பழிவாங்கவில்லை. அப்போது இருந்த நிலை வேறு. இப்போது உள்ள நிலை வேறு. 13 அமைச்சர்கள் மீது வழக்கு உள்ளது. உப்பை தின்னவன் தண்ணீர் குடித்தாக வேண்டும். மீண்டும் அதிமுக, ஆட்சி அமைக்கும்.

வேட்பு மனு தாக்கலின்போது என்ன சொத்து மதிப்பு, இப்போது என்ன மதிப்பு என்று கணக்கிடப்படும். எங்கள் மீது கல் வீசுகின்றனர். அது திருப்பி உங்களுக்கே வரும். தினமும் போட்டோஷூட்தான். இதை கூறினால் சாவி கொடுத்த பொம்மைபோல் பதில் பேசுகிறார், ஆர்.எஸ்.பாரதி.

ஸ்டாலின் திட்டம் அறிவித்தால் ஒரு குழு போடுகிறார். இதுவரை 38 குழு போட்டு சாதனை படைத்துள்ளார். ஐஏஎஸ் அலுவலர்கள் இல்லாமல் குழு அமைத்தால், அமைச்சர்களுக்கு என்ன வேலை? போகப்போக அனைத்து குழுக்களையும் கண்காணிக்க குழு அமைப்பார் போலும்.

அதிமுக ஆட்சியில் 11 மருத்துவக்கல்லூரி, மூன்று கால்நடை மருத்துவக்கல்லூரி, கால்நடை பூங்கா, சட்டக்கல்லூரியை கொண்டு வந்தோம். இந்த பணிகள் முடிந்து அதனையாவது ஒழுங்காக திறங்கள். அதிமுக கொண்டு வந்த திட்டங்களை திறந்து வைத்தால் அதிமுகவுக்கு பெயர் வந்து விடும் என்று நினைக்கின்றனர்.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. 36 மணி நேரத்தில் 22 கொலைகள் நடந்துள்ளது என்றால், மாநிலத்தின் நிலையை பாருங்கள். தமிழ்நாட்டில் அனைத்து பகுதிகளிலும் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுகிறது. கண்காணிக்க வேண்டிய உளவுத்துறை செயல்படவில்லை.

திமுகவினராலே கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது. 2,148 பேர் கைது செய்து அதில் திமுகவினரை மட்டும் விட்டுவிட்டனர். அரசை நம்பி மாணவர்களை அனுப்புகின்றனர். அவர்களை பாதுகாக்கும் பொறுப்பு அரசிற்கு உள்ளது. ஆனால் முதலமைச்சருக்கு கவலை இல்லை. பெற்றோர்கள்தான் தங்கள் பிள்ளைகளை கவனமுடன் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஆன்லைன் ரம்மி தடை செய்வதாக கூறி ஒரு வருடம் ஆகிவிட்டது. இப்போது அதை தடை செய்ய கருத்து கேட்பதாக கூறுகின்றனர். அதில் ஆதாயம் இருப்பதால் அதனை தடை செய்ய முதலமைச்சருக்கு மனம் இல்லை. பலர் இறந்து விட்டனர். மக்கள் மீது அக்கறை இல்லாத முதலமைச்சர் என்பது வெளிப்படையாக தெரிகிறது.

மின்கட்டணம் குறித்து கேட்டாலே ஷாக் அடிக்கிறது. 12 சதவீதம் முதல் 52 சதவீதம் வரை மின்கட்டணத்தை உயர்த்தியுள்ளனர். ஒவ்வொரு வருடமும் 6 சதவீதம் உயர்த்திக் கொள்ளலாம் என ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி தந்துள்ளது. விசைத்தறிக்கு ஒரு யூனிட்டிற்கு 1 ரூபாய் 40 பைசா உயர்த்துகின்றனர்.

ஏற்கனவே நூல் விலை உயர்வு, கரோனா கால முடக்கம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். திமுக ஆட்சி முடியும்போது 49 ஆயிரம் கோடி கடனில் விட்டுச் சென்றனர். 60 ஆயிரம் கோடியில் மின்நிலையம், 10 ஆயிரம் கோடியில் துணை மின்நிலையம் உருவாக்கி தடையில்லா மின்சாரம் தந்தோம்.

அதனால்தான் கடன் அதிகரித்தது. திமுகவுக்கு வாக்களித்த மக்களுக்கு சொத்துவரி, மின் கட்டணம், குடிநீர் வரி உயர்த்தி போனஸ் தந்துள்ளனர். மக்கள் கஷ்டங்களையும் உணர்வுகளையும் புரிந்ததால்தான் அதிமுக ஆட்சியில் வரி உயர்த்தவில்லை. திமுக ஆட்சியை உயர்த்தி பிடிப்பது பத்திரிகையும் ஊடகங்களும்தான்.

கரும்பு தோட்டத்தில் கான்கிரீட் சாலை அமைத்து பார்வையிடும் ஸ்டாலின், நவீன விவசாயி. இவரிடம் நாட்டை கொடுத்தால் என்ன ஆகும்? பொங்கல் தொகுப்பில் ஒழுகும் வெல்லத்தை தந்தனர். திருவண்ணாமலையில் பயன்படுத்த முடியாத 2 டன் வெல்லத்தை பறிமுதல் செய்தனர். என்னை பற்றி செய்தி வெளியிட்டால் பத்திரிகை விற்பனையாகிறது.

பத்திரிகைகளையும் வாழ வைப்பது அதிமுகதான். அதிமுகவிலே இல்லாத புகழேந்தி, பெங்களூருவில் கழகத்தை ஒழித்தவர். நோட்டா வாக்குகளை விட குறைவான வாக்குகளை பெற்று மக்கள் செல்வாக்கு இழந்தவரை வைத்து ஊடகங்கள் விவாதம் செய்கின்றன.

இதில் சிலர் திமுகவுக்கு பினாமியாக இருந்து பேசுகின்றனர். அதிமுகவில் ஜனநாயகம் உள்ளது. அதிமுகவில் நான் இல்லை என்றால், இந்த கூட்டத்தில் உள்ள ஒருவர் தலைமைக்கு வருவார். திமுகவில் இதுமுடியுமா? அதிமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்துபோவார்கள்.

ஏழை மக்களுக்காக அம்மா மினி கிளினிக் தந்தோம். அதையும் மூடி விட்டனர். மானிய விலையில் இருசக்கர வாகனம், தாலிக்கு தங்கம், முதியோர் உதவித்தொகை என அனைத்தையும் நிறுத்தி விட்டனர். ஏழை முதியோர்களை துன்புறுத்தாதீர்கள். மீண்டும் அவர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும்.

ஊர் ஊராகச் சென்று வாங்கிய மனுக்கள் என்ன ஆனது? குடும்ப பெண்களுக்கு மாதம் ஆயிரம் என்ன ஆனது? இதுவரை ஒருவருக்கு 16,000 ரூபாய் தந்திருக்க வேண்டும். திருடன் கையில் சாவியை கொடுத்ததுபோல் ஸ்டாலினிடம் ஆட்சியை கொடுத்து விட்டதாக மக்கள் வேதனைப்படுகின்றனர்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற 38 எம்பிக்கள் என்ன செய்தனர்? அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் காவிரிக்காக குரல் கொடுத்தோம். திமுக எம்பிக்கள் குரல் கொடுத்தால் உடனடியாக ரெய்டு நடக்கும். திமுக எம்பிக்கள் அனைவரும் தொழிலதிபர்கள்.

நீட் தேர்வை கொண்டு வந்தது திமுக, காங்கிரஸ்தான். அதனை தடுத்து நிறுத்த போராடியது அதிமுகதான். அரசு பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்கள் 3,80,000 பேர். இவர்களுக்கு மருத்துவம் படிக்கும் வாய்ப்பை 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு தந்தோம்.

இதன் மூலம் 450 மாணவர்கள் மருத்துவமும், 110 மாணவர்கள் பல் மருத்துவமும் படிக்கின்றனர். இவர்களுக்கு அரசே கல்வி கட்டணத்தை ஏற்றுள்ளது” என கூறினார்.

கூட்டத்தில் அதிமுக அமைப்புச் செயலாளர் செம்மலை, மாநகர் மாவட்ட கழகச் செயலாளர் வெங்கடாஜலம், மாநகர அவைத்தலைவர் பன்னீர்செல்வம், மாநிலங்களவை உறுப்பினர் சந்திரசேகரன், சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜமுத்து, சித்ரா, ஜெய்சங்கரன், நல்லதம்பி, சுந்தர்ராஜன், ஒன்றிய கழக, நகர கழக, பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலரும் பங்கேற்றனர்.

இதையும் படிங்க:பரம்பரை மருத்துவர்களின் உயர்த்தப்பட்ட ஓய்வூதிய தொகை ஆணைகளை வழங்கினார் ஸ்டாலின் ..

ABOUT THE AUTHOR

...view details