சேலம் :மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் என்பது பழமொழி. அப்படி மரம் எனக்கூறியவுடன் நம் நினைவிற்கு முதலில் வருவது வேப்பமரம்தான். சேலத்தில் சாலையோரங்கள், குடியிருப்புப் பகுதிகள் என அதிக அளவில் வேப்ப மரங்கள் இருந்தாலும், பெரும்பாலானவை பட்டுப்போய் காய்ந்து காணப்படுகின்றன. எனவே அதனை பாதுகாக்கும் வகையில் 'நம்மை பாதுகாக்கும் வேப்ப மரங்களை நாம் பாதுகாப்போம்' என்ற முழக்கத்தோடு , சேலத்தைச் சேர்ந்த குழந்தைகள் சிலர் வேப்ப மரங்களுக்கு மலர் தூவி நன்றி செலுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். குழந்தைகளின் இந்த செயல் அப்பகுதி மக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
தமிழ்நாட்டின் அனைத்து வகை நிலப்பகுதிகளிலும் வளர்ந்து நிற்கும் இந்த வேப்ப மரங்கள் கடந்த சில ஆண்டுகளாக நோய் தாக்குதலுக்கு ஆளாகி, இலைகள் உதிர்ந்து எலும்புக்கூடுகளாய்க் காட்சியளிக்கின்றன.
இதுதொடர்பாக கள ஆய்வு நடத்தி வேப்ப மரங்களுக்கு என்ன ஆச்சு என்ற தலைப்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் சேலம் பகுதியைச் சேர்ந்த ' நிலம் 5 பவுண்டேஷன்' என்ற தனியார் அமைப்பின் நிறுவனர் பொன். சண்முகவேலு கூறுகையில் ," தமிழ் நிலத்தின் உலக அடையாளமாக திகழ்வது வேம்பு. தமிழர்களின் வாழ்வில் மிக முக்கியமான அங்கம் வகிக்கும் வேப்பமரங்கள் தற்போது ஆங்காங்கே எலும்புக்கூடுகளை போல காய்ந்து கருகிப்போய் நிற்கின்றன.
நெஞ்சை கனக்க வைக்கும் இந்தக் காட்சி நமக்கு ஏதோ ஒரு நோய் தாக்குதல் என்பதை உணர்த்துகிறது. இதுகுறித்து தாவரவியல் வல்லுநர்கள் உடன் ஆலோசனை செய்தோம். தேயிலைக் கொசு என்ற கொசு வகை அதிக அளவில் பெருகி வேப்ப மரங்களில் வசிப்பதால் இலைகள் பாதிப்புக்கு உள்ளாகி, அவை காய்ந்து போவதாகவும், மிக விரைவிலேயே இலையுதிர்காலம் வந்ததைப்போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவதாகவும் கூறினர்.