சேலம்:தமிழ் மாதங்களில் ஆடி மாதம் சிறப்பு வாய்ந்த மாதம் என்பதால் இந்த மாதம் முழுவதும், அம்மன் கோயில்களில் விழாக்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் ஆடி மாதத்தின் 18ஆம் நாளை ஆடிப்பெருக்கு விழாவாக பழங்காலம் முதல் கொண்டாடி வருகின்றனர். மேலும் மகாபாரதப்போர் ஆடி ஒன்று முதல் பதினெட்டாம் தேதி வரை நடைபெற்றது என்பதை நினைவுகூரும் வகையிலும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
ஆடிப்பெருக்கு விழாவையொட்டி சேலம் மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேகம், அலங்கார ஆராதனை நடைபெற்றது. பின்னர் முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். ஆடிப்பெருக்கு விழாவையொட்டி கோட்டை அழகிரிநாதர் பெருமாள் கோயிலில் இருந்து கோட்டை மாரியம்மன் கோயிலுக்கு சீர்வரிசை கொண்டு வரப்பட்டது. முன்னதாக கோட்டை மாரியம்மன் கோயிலில் இருந்து கோட்டை பெருமாள் கோயிலுக்கு அம்மன் ஊர்வலம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கோட்டை அழகிரிநாதர் கோயிலில் மாரியம்மனுக்கு புடவை, திருமாங்கல்யம், வெற்றிலை பாக்கு, பழங்கள், வளையல் உள்ளிட்டப் பொருட்கள் சீர் வரிசையாக வழங்கப்பட்டது.
சேலம் மாமாங்கம் ஊத்துக்கிணற்றில் ஆடிப்பெருக்கு விழாவையொட்டி செயற்கை நீருற்று ஏற்பாடு செய்யப்பட்டு பக்தர்கள் மீது நீர் தெளிக்கப்பட்டது. மேலும் அங்கு வந்த பக்தர்கள் கோயில் சிலைகள், ஆயுதங்களை எடுத்து வந்து நீருற்றில் சுத்தம் செய்தனர். பின்னர் சிலைகளுக்கு சிறப்புப் பூஜை செய்து வழிபட்டனர்.