சேலம்: தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கத்தின் பணியாளர் சந்திப்பு இயக்கம் மற்றும் சென்னை பேரணி குறித்த ஆலோசனைக் கூட்டம் சேலத்தில் இன்று (நவ. 26) நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், "அரசு ஊழியர்கள் கடந்த 20 ஆண்டுகளாக பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி பல்வேறு கோரிக்கைகளை அரசுக்கு விடுத்து வருகின்றனர். மேலும், தொடர் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.
ஆனால் மற்ற மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த அரசுகள் நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், தமிழக அரசு அதற்கான ஒரு வார்த்தையைக் கூட இதுவரை அறிவிக்கவில்லை. தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த இந்த வாக்குறுதியைக் கூட நிறைவேற்றாமல் அரசு ஊழியர்களை தமிழக அரசு ஏமாற்றி வருகிறது.
மேலும் நியாய விலைக் கடைகளில் கட்டுப்பாடற்ற பொருட்களை விற்கக் கூடாது என்று சட்டம் இருந்தும், கட்டுப்பாடற்ற பொருட்களை கட்டாயம் விற்க வேண்டும் என்று நியாய விலைக் கடை பணியாளர்களை அதிகாரிகள் நிர்பந்தித்து வருகின்றனர்.