சிறைச்சாரல் இன்னிசை குழு - கைதிகளே பாடல் எழுதி இசையமைத்த பாடல் இணையத்தில் வைரல்! சேலம்: மத்திய சிறையில் 786 கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் மனம் திருந்தி மறுவாழ்வு பெற்று மகிழ்ச்சியுடன் வாழும் நோக்கில் பல்வேறு நல்வாழ்வு பயிற்சிகள் சிறை நிர்வாகத்தால் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் காந்தி ஜெயந்தி, சுதந்திர தினம், குடியரசு தினம் உள்ளிட்ட அரசு விழாக்களின் போது சிறை வாசிகளை மகிழ்விக்கும் வகையில் சிறைச் சாரல் இன்னிசை குழு உருவாக்கப்பட்டது.
இந்த குழு மூலம் இசைப் பயிற்சியும், கச்சேரிகளும் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது இசைக் கச்சேரி குழுவில் 18 தண்டனை கைதிகள் இடம் பெற்று உள்ளனர். மேலும் பல கைதிகளுக்கு இசைப்பயிற்சி அளித்து அவர்களையும் மேம்படுத்தவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதனை அடுத்து இசையில் ஆர்வம் கொண்டவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குரல் வளம் பயிற்சி, வயலின், கித்தார், நாதஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு இசைக் கருவிகளை வாசிக்க பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. சிறைச் சாரல் இன்னிசை குழு சார்பில் இப்போது கர்நாடக இசை, மேற்கத்திய இசை (Western Music) பயிற்சிகளும் ஆர்வம் உள்ள சிறைவாசிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க:உலகத்தரத்திற்கு மாறும் சேலம் ரயில் நிலையம்..! ரூ.45 கோடியில் மேம்பாட்டுப் பணிகள்!
இது தொடர்பாக சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளர் வினோத் கூறுகையில், “சிறைவாசிகளின் இன்னிசைக் கச்சேரி குழுவில் அவர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் சிறையில் தற்போது ஐந்து லட்ச ரூபாய்க்கு இசைக் கருவிகள் வாங்கி அவர்களின் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டு உள்ளது” என்றுக் கூறினார். மேலும் பேசிய அவர், “பிற சிறைகளில் நடந்த போட்டிகளில் சேலம் குழுவினர் பல்வேறு பரிசுகளையும் வென்று அசத்தி வருகின்றனர்.
வெளியில் சென்று பொது இடங்களில் கச்சேரி நடத்துவதற்கு சிறை வாசிகள் இன்னிசை குழுவுக்கு அனுமதி இல்லை. சிறைக்கு உள்ளேயே அவர்கள் தங்களது இசைத் திறமைகளை வெளிப்படுத்தி மகிழ்ச்சி அடையலாம்” என்று தெரிவித்தார். சேலம் சிறை வாசிகளின் இன்னிசை சாரல் இசை குழு சார்பில் கைதிகளே பாடல் எழுதி மெட்டமைத்து இசைக்கப்பட்ட பாடல், சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதையும் படிங்க:குறைவான நேரம் அதிக பணம்..! சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் ஆலோசனை!