சேலம்:ரெட்டிபட்டி பகுதியைச் சேர்ந்தவர், பாலசுப்பிரமணி. இவர் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே ஜஸ்ட்வின் ஐ.டி. டெக்னாலஜி இந்தியா என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். அந்த நிறுவனத்தில் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் ரூ.18 ஆயிரம் வீதம் ஒரு வருடத்தில் ரூ. 2.16 லட்சம் வழங்கப்படும் என கவர்ச்சிகரமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
அதனை நம்பி சேலம், திருச்சி, கிருஷ்ணகிரி, வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் சேர்ந்தனர். தொடக்கத்தில் அவர் கூறியபடியே அதிக வட்டியுடன் கூடிய கவர்ச்சி திட்டத் தொகையினை உறுப்பினர்களுக்கு கொடுத்து வந்தார்.
அதனைத் தொடர்ந்து மேலும் ஆயிரக்கணக்கான நபர்கள் உறுப்பினராக இணைந்து முதலீடு செய்தனர். இந்த நிலையில் பாலசுப்பிரமணி தனது உறுப்பினர்கள் யாருக்கும் பணத்தை வழங்கவில்லை என்று புகார் எழுந்தது. இதேபோல் வேலூர் மாவட்டத்திலும் அவர் மோசடியில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது.
வேலூர், காட்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, பாலசுப்பிரமணியிடம் பணம் கட்டி ஏமாற்றமடைந்த பலர் சேலம் வந்து பாலசுப்பிரமணியை பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைக்க சென்றபோது அடியாட்களை வைத்து மிரட்டி முதலீடு செய்தவர்களை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.