சேலம்:ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஈங்கூர் குட்டபாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் பழனிசாமி - பாப்பாத்தி தம்பதி. இவர்களது மகள் பிரியாவுக்கும் சேலம் கொண்டலாம்பட்டி காமராஜர் காலனி மேட்டுதெரு பகுதியைச் சேர்ந்த சேலம் மாநகராட்சியின் பணிபுரியும் ஓட்டுநர் காளியப்பன் மகன் ராஜதுரைக்கும் கடந்தாண்டு திருமணம் நடைபெற்று உள்ளது.
இந்த தம்பதிக்கு சஞ்சனா என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு (செப்.5) பழனிசாமி தனது குடும்பத்துடன் சேலத்தில் உள்ள அவரது மகள் வீட்டிற்கு ஆம்னி வேனில் சென்று விட்டு, இன்று அதிகாலை மகள் பிரியா மற்றும் பேத்தி சஞ்சனா ஆகியோருடன் பெருந்துறை திரும்பிக்கொண்டிருந்தார்.
இன்று அதிகாலை சங்ககிரி அடுத்த சின்ன கவுண்டனூர் நான்கு ரோடு பகுதியில் சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் வேன் சென்ற போது சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு லாரியின் பின்புறத்தில் எதிர்பாராத விதமாக மோதியது.
இந்த கோரவிபத்தில் பழனிசாமி(52), பாப்பாத்தி(47), ஆறுமுகம்(50), மஞ்சுளா(42), செல்வராஜ்(55), சஞ்சனா(1) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஆபத்தான நிலையில் இருந்த ஆம்னி வேன் ஓட்டுநர் விக்னேஷ்(20), மற்றும் பிரியா(25) ஆகியோரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.