மாங்கனி மாநகரம் என்று அழைக்கப்படும் சேலம் இரும்பு, நெசவுத் தொழில், வெள்ளி தயாரிப்பு, தட்டுவடை செட்டுக்கு மிகவும் பிரபலம். அதேபோல் இங்கு தயாரிக்கப்படும் வெள்ளி பொருள்களுக்கு மவுசு அதிகம். புவிசார் குறியீடு பெற்ற பெருமையைக் கொண்டது சேலம் வெள்ளி ஆபரணங்கள். ஆனால் தற்போது கரோனா பொதுமுடக்கம் காரணமாக வெள்ளி ஆபரண தொழில் இருளடைந்து கிடப்பதாக தொழிலாளர்கள், வெள்ளி வணிகர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
சேலம் செவ்வாய்ப்பேட்டை, அன்னதானப்பட்டி, நெத்திமேடு, பள்ளப்பட்டி, சிவதாபுரம், பனங்காடு உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெள்ளி ஆபரணங்கள் தயாரிக்கும் பட்டறைகள் தொழிற்கூடங்கள் சிறியதும் பெரியதுமாக உள்ளன. இங்கு பெண்கள், குழந்தைகள் விரும்பி அணியும் வெள்ளி கால் கொலுசு, அரைஞாண் கொடி, சந்தனக் கிண்ணம், குங்குமச்சிமிழ், குவளை, வெள்ளித்தட்டு, மோதிரங்கள், கழுத்தில் அணியும் டாலர், வெள்ளி பிரேஸ்லெட் மற்றும் சாமி சிலைகள் எனப் பல்வேறு வெள்ளிப் பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன.
சேலத்தில் உற்பத்தி செய்யப்படும் வெள்ளிப் பொருள்கள் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களுக்கும், வட மாநிலங்களுக்கும் கொண்டுசெல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. அதிலும் குறிப்பாக ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில், சேலம் வெள்ளிப் பொருள்களுக்கு எப்போதுமே தனி மவுசு உள்ளது. சேலம் மாவட்டத்தில் மட்டும் வெள்ளி தொழிலில் நம்பி 1.5 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை முன்னிட்டு, வடமாநில வியாபாரிகள் சேலத்திலிருந்து மொத்தமாக வெள்ளி ஆபரணங்கள், பொருள்களைக் கொள்முதல்செய்து, வட மாநிலங்களில் கொண்டுசென்றது விற்பனை செய்வார்கள். ஆனால் இந்தாண்டு தீபாவளியின்போது எந்த ஆர்டரும் வடமாநில வியாபாரிகளிடமிருந்து கிடைக்கப்பெறாததால் சேலம் வெள்ளி தொழில் கடும் சரிவை சந்தித்து உள்ளது.
அதேபோல பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி கொண்டாடப்பட உள்ளது. இந்தப் பண்டிகையின் போதும் கூடுதலாக ஒவ்வொரு ஆண்டும் வடமாநில வெள்ளி வியாபாரிகள் வெள்ளிப் பொருள்களை கொள்முதல் செய்வது வழக்கம். ஆனால் டிசம்பர் மாதம் கடந்து கொண்டிருக்கும் நிலையிலும் வடமாநில வியாபாரிகளிடமிருந்து ஆர்டர்கள் கிடைக்கப்பெறவில்லை என்று சேலம் வெள்ளி தொழிலாளர்கள் வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
மேலும் கரோனா பொது முடக்கத்தில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையிலும் உள்ளூர் ஆர்டரும் முறையாக வராததால் வெள்ளிப்பட்டறை தொழில் இருண்டு கிடப்பதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து வெள்ளி பட்டறை தொழிலில் ஈடுபட்டுள்ள சேலம் சிவதாபுரம் பகுதியைச் சேர்ந்த தொழிலாளி சந்திரசேகர் கூறுகையில், "ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின்போது வடமாநிலங்களிலிருந்து ஆர்டர்கள் கிடைக்கும்.