சேலம்:காலநிலை மாற்ற இயக்கம் தொடர்பான கருத்தரங்கம் நேற்று (அக்.19) சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சேலம் வனப்பரப்பை அதிகரிக்கும் நடவடிக்கைகள் போன்ற பல முயற்சிகள் குறித்து அதிகாரிகளுக்கு விளக்கும் விதமாக சேலம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.
இதில், ஆட்சியர் செ.கார்மேகம் பேசுகையில், “காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் பொருட்டு தமிழக அரசு பல்வேறு தொலைநோக்கு முயற்சிகளை மேற்கொள்வதில் முன்னோடி மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது. தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம், பசுமை தமிழ்நாடு இயக்கம் மற்றும் தமிழ்நாடு சதுப்புநில இயக்கம் ஆகியவற்றை ஏற்படுத்தியுள்ளது.
பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றதைக் குறைப்பதற்கான திட்டங்களை வகுத்தல், பொதுப் போக்குவரத்துப் பயன்பாட்டை அதிகரித்தல், பசுமையான ஆற்றல் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாட்டின் மூலம் உமிழ்வைக் குறைப்பதற்கான உத்திகளை மேம்படுத்துதல் ஆகியவை காலநிலை மாற்ற இயக்கத்தின் முக்கிய இலக்காகும்.
சேலம் மாவட்டத்தில் வனப்பரப்பை 10 ஆண்டுகளில் 33 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் தற்போது 1,469 சதுர கிலோ மீட்டர் வனப்பரப்பு உள்ளது. இதை 1,728 சதுர கிலோ மீட்டராக உயர்த்த வேண்டும். அந்த வகையில், புதியதாக 258.37 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு, அதாவது 63,845 ஏக்கரில் வனப்பரப்பை அதிகரிக்க வேண்டும்.
சேலம் மாவட்டத்தில் ஓராண்டுக்கு 6,385 ஏக்கரில் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சிகளில் மரங்களை நட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு ஆண்டுதோறும் 12 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட வேண்டும். இதன் மூலம் வனப்பரப்பை 33 சதவீதமாக உயர்த்தப்பட உள்ளது.