சேலம்:தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் இன்று வரை சேலம் மாவட்டத்தில் உரிய ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட ரொக்கம் ரூ.19.26 லட்சமும், ரூ.38.25 லட்சம் மதிப்பிலான 79.58 கிலோ வெள்ளி பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சேலம் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சி.அ. ராமன் தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத் தேர்தல் 2021 அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிப்பதற்கும், வாகன சோதனைகளில் ஈடுபடுவதற்கும் பறக்கும் படை உள்ளிட்ட பல்வேறு வகையான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சேலம் மாவட்டத்தில் உள்ள சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு, வீரபாண்டி, ஒமலூர், எடப்பாடி, கெங்கவல்லி, ஏற்காடு, ஆத்தூர், சங்ககிரி, மேட்டூர் ஆகிய 11 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 33 பறக்கும் படைகள், 33 நிலையான கண்காணிப்புக் குழுக்கள், 11 வீடியோ கண்காணிப்பு குழுக்கள் உள்ளிட்ட குழுக்கள் தொடர்ந்து 24 மணி நேரமும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், 11 வீடியோ பார்வையிடும் குழுக்கள், கணக்குக் குழு, ஊடக சான்றளிப்பு குழு, கண்காணிப்புக் குழு, ஆவணங்களின்றி பறிமுதல் செய்யப்படும் ரொக்கம், பொருட்களுக்கான ஆவணங்களை சமர்ப்பித்த பின் அவற்றை ஆய்வு செய்து விடுவிக்கும் குழு, கட்டுப்பாட்டு அறையில் அமைக்கப்பட்டுள்ள குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு குழுக்களும் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மற்றும் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், இந்திய தேர்தல் ஆணையம் ரூ.50,000க்கும் மேலான ரொக்கத்தினை எடுத்துச் செல்லும் சூழ்நிலை ஏற்பட்டால் உரிய ஆவணங்களோடு எடுத்துச் செல்ல வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு உரிய ஆவணங்களின்றி ரூ.50,000க்கும் மேல் ரொக்கம், பொருட்கள் எடுத்துச் சென்றால் மேற்குறிப்பிட்டுள்ள கண்காணிப்பு குழுக்கள் மூலம் பறிமுதல் செய்யப்படும்.
சேலம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டதிலிருந்து (26.02.2021 முதல் 10.03.2021 காலை 8.00 மணி வரை) இதுவரை உரிய ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட ரூ.19,26,372 ரொக்கமும், ரூ.38,24,950 மதிப்பிலான 79.58 கிலோ கிராம் வெள்ளி பொருட்களும், பறிமுதல் செய்யப்பட்டுள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பெண் எஸ்பி பாலியல் வழக்கு தொடர்பா 50 பேரிடம் விசாரணை - தமிழ்நாடு அரசு