சேலம்:ஆத்தூர் அருகேயுள்ள மஞ்சினி கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு கடந்த 26ஆம் தேதி பிளஸ் 2 படிக்கும் மாணவர் ஒருவர், முறையாக முடி வெட்டாமல் பின்புறம் கொண்டை போல் வைத்துக்கொண்டு பள்ளிக்கு வந்துள்ளார்.
இதனைக் கண்ட தலைமை ஆசிரியர் அந்த மாணவனை தனது அறைக்கு அழைத்துச் சென்று இது போல் பள்ளிக்கு வரக்கூடாது எனத் திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவன் தலைமை ஆசிரியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் நாற்காலி மீதிருந்த பொருள்களை கிழே தள்ளி உடைத்துள்ளார்.
சத்தம் கேட்டு வந்த ஆசிரியர்கள் மாணவனை சமாதானப்படுத்தினார்கள். இது குறித்து தகவலறிந்த பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் பள்ளிக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து மாணவனிடம் பெற்றோரை பள்ளிக்கு அழைத்து வரும்படி கூறியுள்ளனர். அதன்படி மாணவன் தனது பெற்றோரை பள்ளிக்கு அழைத்துச் சென்றுள்ளார். பெற்றோரிடம் நடந்த சம்பவம் குறித்து தலைமை ஆசிரியர் தெரிவித்தார்.
அப்போது மாணவன் தனது பையில் இருந்து காலி பீர் பாட்டிலை எடுத்து உடைத்ததுடன், ‘என்னை மட்டும் தான் குறி வைத்து இப்படி கேட்கிறீர்கள்’ எனக் கூறியபடி தலைமை ஆசிரியரை பாட்டிலால் குத்த முயன்றுள்ளார். உடனடியாக சுதாரித்த சக ஆசிரியர்கள் மாணவனை தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவலறிந்த ஆத்தூர் காவல் துறையினர் உடனடியாக அரசுப் பள்ளிக்குச் சென்றனர்.