உயர்நீதிமன்றம் நியமித்த அட்வகேட் கமிஷனரை பணி செய்ய விடாமல் தடுத்த பள்ளி நிர்வாகி சேலம்:ஓமலூர் வட்டம் தொளசம்பட்டி கிராமத்தில் கடந்த ஏழு ஆண்டுகளாக அங்கீகாரம் இல்லாமல், போலி ஆவணங்களைக் கொடுத்து செயல்பட்டு வருவதாகக் கூறப்படும் தனியார் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியின் விதிமுறை மீறல்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க கூறி, ஓமலூர் பி.டி.ஓ-க்கு கடந்த 2020ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
ஆனால், இப்பள்ளி மீது ஓமலூர் பி.டி.ஒ சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல், தொடர்ந்து இப்பள்ளி நிர்வாகிக்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததாகத் தெரிகிறது. இதனால் தாரமங்கலம் சண்முகம் என்பவர், ஓமலூர் பி.டி.ஓ மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். அதன் பிறகு, ஓமலூர் பி.டி.ஒ பொய்யான அறிக்கையை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததாகக் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, கும்பகோணத்தில் நடந்த விபத்து போல தொளசம்பட்டியில் நடக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்த உயர் நீதிமன்றம், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அட்வகேட் கமிஷனரை நியமித்து, உண்மை நிலையை நேரில் ஆய்வு செய்து, தகுந்த ஆதாரத்துடன் அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டிருந்தது.
மேலும், சமீபத்தில் இந்த பள்ளியின் வழித்தடங்கள் தார்சாலைகளாக போடப்பட்டிருப்பதாக போலியான புகைப்படங்களை பள்ளி நிர்வாகம் நீதிமன்றத்தில் கொடுத்து ஏமாற்றி இருப்பதும், தற்போதைய உண்மையான மண்சாலை புகைப்படங்களை நீதிமன்றத்தில் ஆதாரங்களுடன் கொடுக்கப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதனைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவின் பேரில் நேற்று (டிச.16) அட்வகேட் கமிஷனர் இப்பள்ளியை ஆய்வு செய்ய சென்றுள்ளார். அப்போது கல்வித்துறையின் உத்தரவையும், அட்வகேட் கமிஷனர் உத்தரவையையும் மீறி, விடுமுறை நாளான நேற்று (டிச.16) இப்பள்ளி செயல்பட்டுக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
மேலும், கல்வித் துறையினர், வருவாய் துறையினர், ஊரக வளர்ச்சித் துறையினர், காவல் துறையினர் என அனைவரின் முன்னிலையிலும், பள்ளி நிர்வாகி கலைச்செல்வம் அட்வகேட் கமிஷனரை பணி செய்ய விடாமல் தடுத்துள்ளார். மேலும், "நீங்கள் ஏன் எனக்கு எழுத்து மூலமாக தகவல் கொடுக்காமல் என் பள்ளிக்கு வந்தீர்கள்" என்று கேட்டு, பள்ளி நிர்வாகி மிரட்டியும் உள்ளார்.
இதனால் அதிர்ந்து போன அட்வகேட் கமிஷனர், உயர் நீதிமன்றத்தை அவமதிக்கும் தங்களுக்கு எழுத்து மூலமாக தகவல் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ஓமலூர் பி.டி.ஒ மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து அரசு துறை அதிகாரிகளுக்கும் சட்டப்படி எழுத்து மூலமாக தகவல் கொடுக்கப்பட்டு உள்ளதாகவும் கமிஷனர் கூறியுள்ளார்.
மேலும், "இன்று நீங்கள் பள்ளிக்கூடம் நடத்திக் கொண்டிருக்கும்போது நான் ஆய்வு செய்வதன் மூலம், மாணவர்களுக்கு இடையூறு ஏற்படும். எனவே மாணவர்களுக்கு எந்த விதமான இடையூறுகளும் இல்லாதவாறு, அரையாண்டுத் தேர்வு முடிந்த பிறகு, விடுமுறை நாளான டிச.26ஆம் தேதி மீண்டும் ஆய்வு நடத்தப்படும். அதற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்" என பள்ளி நிர்வாகியிடம் அட்வகேட் கமிஷனர் கேட்டுக் கொண்டு அங்கிருந்து சென்றுள்ளார்.
இதையும் படிங்க:நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.. அறநிலையத்துறை இணை ஆணையர் பதிலளிக்க உயர் நீதிமன்றக்கிளை உத்தரவு!