தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நீக்க கோரி எஸ்சி எஸ்டி ஆசிரியர்கள் சங்கம் போராட்டம்!

SC/ ST Teachers Association protest: பெரியார் பல்கலை துணைவேந்தர் ஜெகநாதனை பதவி நீக்கம் செய்ய தமிழ்நாடு பல்கலைக்கழக கல்லூரி எஸ்.சி.எஸ்.டி ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

எஸ்சி எஸ்டி ஆசிரியர்கள் சங்கம் போராட்டம்
பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நீக்கம் செய்ய வேண்டும்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 10, 2024, 8:46 AM IST

பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நீக்கம் செய்ய வேண்டும்

சேலம்:சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில், தனியார் நிறுவனம் தொடங்கிய முறைகேட்டில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட துணைவேந்தர் ஜெகநாதனை, பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், அவர் மீதான ஊழல் முறைகேடு குறித்து விசாரணை நடத்திட வலியுறுத்தியும், தமிழ்நாடு பல்கலைக்கழக கல்லூரி எஸ்சி எஸ்டி ஆசிரியர்கள் சங்கத்தினர் நேற்று (ஜன.9) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரியார் பல்கலைக்கழகத்தில், அனுமதியின்றி தங்களது பெயரில் ‘பூட்டர்’ என்ற கல்வி நிறுவனத்தை தொடங்கிய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதன் முறைகேட்டில் ஈடுபட்டதாக, பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இதனையடுத்து, அவர் தொடர்புடைய இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டது. மேலும், இது தொடர்பான வழக்கு சூரமங்கலம் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது. அதனைத் தொடர்ந்து, துணைவேந்தருக்கு உதவியாக செயல்பட்ட பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல் மற்றும் பேராசிரியர்கள் இருவர் தலைமறைவாகி உள்ள நிலையில், அவர்களை கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதன், மீண்டும் பணி செய்யக்கூடாது என்று ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். இதனிடையே, நேற்று சேலம் பெரியார் பல்கலைக்கழக நுழைவுவாயிலில், பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதனை பணி நீக்கம் செய்திட வேண்டும் என்றும், அவர் மீதான ஊழல் முறைகேடு குறித்து விசாரணை நடத்திட வலியுறுத்தியும், நிர்வாகச் சீர்கேட்டை கண்டித்தும் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி எஸ்சி எஸ்டி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், பல்கலைக்கழக நிர்வாகத்தைக் கண்டித்தும், தமிழக அரசைக் கண்டித்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி எஸ்சி எஸ்டி ஆசிரியர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர், குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது எஸ்சி எஸ்டி ஆசிரியர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “பூட்டர் என்ற பெயரில் கல்வி நிறுவனம் தொடங்கிய துணைவேந்தர் ஜெகநாதன், பல்வேறு ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார். அவர் மீது காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதன் அடிப்படையில் கைது செய்யப்பட்டார். எனவே, அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் தலையிட்டு, பல்கலைக்கழகத்தின் சீர்கேடுகள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

இதையும் படிங்க:துணை வேந்தர் நியமனத்திற்கான அறிவிப்புகளை திரும்ப பெற்ற ஆளுநர் மாளிகை.. திடீர் மனமாற்றம் ஏன்?

ABOUT THE AUTHOR

...view details