சேலம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஓமலூர் சட்டமன்ற தொகுதியில் முதல் கட்டமாக தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனத்தை சேர்ந்த பெண்களுக்கான தொழில் முனைவோர் விழிப்புணர்வு நிகழ்ச்சியின் தொடக்கவிழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன் கலந்து கொண்டு, நிகழ்ச்சியை தொடங்கிவைத்து, தொழில் முனைவோருக்கான கடனுதவி குறித்தும், மானியம் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.
மேலும் பெண்களுக்கு உரிய நேரத்தில் கடனுதவி வழங்கிட வேண்டும் என்றும், கடனுதவி பெற வருபவர்களிடம் கடுமையான நிபந்தனைகளை விதிக்க கூடாது என்றும் வலியுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில், ஓமலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மத்திய அரசின் தேசிய சிறு தொழில் கழகத்தின் சார்பில் தாழ்த்தப்பட்ட, பழங்குடி இன பெண்கள் சுய தொழில் துவங்கிட உள்ள பல்வேறு வழி முறைகளை அவர்களிடம் எடுத்துரைத்து அவர்களுக்கு தேவையான கடனுதவியை பெற்றுத்தர திமுக தலைவர் அறிவுறுத்தி உள்ளதாகவும், அதன் அடிப்படையில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.