தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாக்குறுதிகளை மட்டுமே வழங்கும் திராவிட கட்சிகளை நம்ப வேண்டாம்: சரத்குமார் வேண்டுகோள்

சேலம்: தேர்தல் நேரத்தில் திராவிட கட்சிகள் வாக்குறுதிகளை மட்டுமே வழங்கி, வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து தேர்தலில் வெற்றி பெற முயல்வதாகவும், அதனை நம்பி ஏமாற வேண்டாம் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

sarathkumar
sarathkumar

By

Published : Mar 27, 2021, 10:30 PM IST

சேலம் மாவட்டம் வீரபாண்டி சட்டப் பேரவைத் தொகுதியில், மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அமுதா ராஜேஸ்வரனை ஆதரித்து சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் இன்று (மார்ச் 27) தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது அவர் கூறியதாவது, பொதுநல சேவைக்கு அடுத்த கட்டம் அரசியல். அந்த அரசியலில் அதிகாரம் இருக்கும்போதுதான் மக்களுக்கு தேவையானதை செய்து முடிக்க முடியும். அதற்காக அமைக்கப்பட்ட கூட்டணி எங்கள் கூட்டணி. திராவிட கட்சிகள் என்ன செய்தார்கள் என்பதை விட, நாம் அமைத்திருக்கும் கூட்டணி என்ன செய்யப் போகிறது, என்ன செய்ய வேண்டும் என்பதை எண்ணி தொலைநோக்குப் பார்வையுடன் இந்த கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த வெற்றி கூட்டணியை மக்கள் ஆதரிக்க வேண்டும் . கடந்த காலங்களில் திராவிட கட்சிகள் மக்களுக்கு மாறி மாறி வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சி கட்டிலில் அமர்ந்து வருகிறது. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் எப்படி மக்கள் ஒன்று திரண்டு ஒருமித்த கருத்தோடு வெள்ளையர்களை வெளியேற்றினார்களோ, அதுபோல இரண்டு திராவிட கட்சிகளையும் வெளியேற்ற புதிய கூட்டணிக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்.

கரோனா காலத்தில் மக்களின் இயலாமையை அறிந்து கொண்ட அரசியல் கட்சிகள், பணத்தை கொடுத்து எப்படியும் வாக்குகளை பெற்று விடலாம் என்ற நம்பிக்கையில் களத்தில் பணியாற்றி வருகிறது. இதனை ஒரு போதும் மக்கள் அனுமதிக்கக் கூடாது.

தேர்தல் பரப்புரை மேற்கொண்ட சரத்குமார்

மக்களின் உணர்வுகளைப் புரிந்து கலைத்துறையில் சிறந்து விளங்கிய கமலஹாசனும், கல்வித் துறையில் சிறந்து விளங்கும் பாரிவேந்தர் தலைமையிலான கட்சியும், சட்டப்பேரவையிலும் நாடாளுமன்றத்திலும் அங்கம் வகித்த சமத்துவ மக்கள் கட்சியும் புதிய கூட்டணி அமைத்து, மக்களுக்காக பல்வேறு திட்டங்களை வகுத்து களத்தில் நிற்கிறது. இந்த புதிய கூட்டணியை வெற்றி பெற செய்ய அனைவரும் முன்வரவேண்டும் . இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில் வீரபாண்டி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அமுதா ராஜேஸ்வரனை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும்" என்று கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details