சேலம் மாவட்டம் சங்ககிரி வருவாய் கோட்டத்திற்கு உள்பட்ட ஸ்ரீ சிவசக்தி நீரேற்று பாசன விவசாயிகள் சங்கத்தினர் நேற்று (நவ.19) இரவு ஓமலூரில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்தனர்.
அப்போது, தங்கள் விவசாய நிலங்களில் நீரேற்று திட்டம் மூலம் பாசன வசதியை ஏற்படுத்தித் தந்து அரசாணை வெளியிட்டதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
சங்ககிரி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட அன்னதானப்பட்டி, வைகுந்தம், உள்ளிட்ட 27 கிராமங்களில் உள்ள 300 விவசாயிகள் சுமார் 500 ஏக்கர் நிலம் வைத்துள்ளனர்.
இந்த நிலங்களுக்கு ஆற்று நீர் பாசன வசதி இல்லாததால் புள்ளாக் கவுண்டம்பட்டி, பகுதிகளில் உள்ள கிணற்றிலிருந்து நீரேற்று திட்டம் மூலம் பம்பு செட் அமைத்து குழாய் வழியாக சுமார் 35 கிலோமீட்டர் தொலைவிற்கு தண்ணீர் கொண்டு வந்து சொட்டு நீர் பாசனம் மூலமாக தண்ணீரைப் பயன்படுத்த தமிழ்நாடு அரசிடம் அனுமதி கோரியிருந்தனர்.
இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த அக்டோபர் 29ஆம் தேதி 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்டு, அரசாணை மூலம் விவசாயிகள் கோரிக்கையை நிறைவேற்றினார். இதையடுத்து முதலமைச்சரவை சந்தித்த விவசாயிகள் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.