சேலம்:சேலம் மாவட்டம் மேட்டூர், சுப்பராயன் நகரைச் சேர்ந்தவர் அசோக்குமார் (37). பொறியியல் பட்டதாரியான இவர், மேட்டூர் ஆர்.எஸ். பகுதியில் உள்ள சிட்கோவில் தொழிற்சாலைகளுக்கு தேவையான மாசு அளவீடும் கருவியை உற்பத்தி செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். அண்மையில், கரோனா நோய் தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரது உறவினர்கள், நண்பர்கள் ஆக்ஸிஜன் சிலிண்டர் பற்றாக்குறையின் காரணமாக உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், ஆக்ஸிஜன் பற்றாகுறையின் காரணமாக ஏற்படும் உயிர் இழப்பை தடுக்க குறைந்த விலையில் ஆக்ஸிஜன் செறிவூட்டும் நவீனக் கருவியை வடிவமைத்து அசத்தியுள்ளார் அசோக்குமார்.
கம்ப்ரஸர் மூலம் வெளிக்காற்றில் உள்ள நைட்ரஜன், ஆக்சிஜனை உறிஞ்சி ஜியோ லைட் என்னும் வேதிப்பொருள் மூலம் ஆக்ஸிஜனை மட்டும் பிரித்தெடுத்து சுவாசக் கருவியினுள் செலுத்தி நுரையீரல் நன்றாக செயல்பட உதவும் வகையில் இந்தக் கருவியை வடிவமைத்துள்ளார். இந்த கருவியில் ஒரு கிலோ ஜியோ லைட்டை பயன்படுத்துவதன் மூலம் 20 நாள் வரை ஆக்ஸிஜனை செறிவூட்ட முடியும். ஒரு நிமிடத்தில் 10 லிட்டர்வரை ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய முடியும்.