இளங்கலை பொறியியல் பயின்றிருந்தாலும், சொந்த ஊரில் சுயதொழில் தொடங்குவதே ஸ்ரீராமின் விருப்பம். முதலில் கோழிப் பண்ணை வைக்க நினைத்தவர், எதேச்சையாக காளான் வளர்ப்பு குறித்து அறிந்தார். காளான் வளர்ப்பு குறைந்த முதலீட்டில் தொடங்குவதற்கான தொழிலாக தெரியவே முழு மூச்சாக ஸ்ரீராம் அதில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.
தொழிலை முடிவு செய்தாகிவிட்டது. அதனைச் செய்வதெப்படி? காளானைப் பயிரிடுவது குறித்து ஸ்ரீராமிற்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை. சேலம் மாவட்டத்தில் காளான் வளர்த்து வருபவர்களை நாடியுள்ளார்.
ஸ்ரீராமின் ஆர்வத்தை ஒருவரும் புரிந்துகொண்டு உதவவில்லை. எல்லா கதவுகளும் அடைத்தப் பின்னரும்கூட ஒரு சிறிய ஒளிக்கீற்று தெரியும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து முயன்றார், ஸ்ரீராம். அவரின் ஆர்வமும் விடாமுயற்சியும் ஏற்காடு அடிவாரத்தில் 25 ஆண்டுகளாகக் காளான் வளர்த்த ஒருவரிடம் ஸ்ரீராமைக் கொண்டுச் சேர்த்தது.
காளான் விதைகளைத் தேர்ந்தெடுப்பது தொடங்கி, அதனைப் பயிரிட்டு சாகுபடி செய்வது வரையிலும் அனைத்தையும் கற்றுக்கொண்டார், தன்னம்பிக்கை நாயகன் ஸ்ரீராம். தொடர் பயிற்சியின் பலனாக, தனியனாக காளான் வளர்ப்பில் ஈடுபட முடியும் என்ற தன்னம்பிக்கை அவருக்கு கிடைத்தது. தாரமங்கலம் பகுதியில் காளான் வளர்ப்பில் யாரும் ஆர்வம் செலுத்தவில்லை என்பதை அறிந்து அங்கேயே கொட்டகை அமைத்தார்.
முதல் முதலீடு
தன்னம்பிக்கையை மட்டும் முதலீடாகக் கொண்டு காளான் வளர்ப்பில் ஈடுபட்ட ஸ்ரீராம், அடுத்தடுத்து சந்தித்த இன்னல்கள் குறித்து கேட்டபோது, ’அதை நான் இன்னல்களாக பார்க்கவில்லை. என்னை வளர்த்தெடுத்த அனுபவங்களாகத்தான் பார்க்கிறேன்’ என சிறுபுன்னகையுடன் பேசத் தொடங்கினார்.
”நான் ஆரம்பத்துல 35 ஆயிரம் ரூபாய் முதலீடு போட்டேன். காளான் வளர்ப்பதற்கு விதைகள், வைக்கோல், தண்ணீர் இதமான சூழல் நிலவும் கொட்டகைதான் அத்தியாவசியம். அதை தயார் பண்ணிட்டு வேலைகளைத் தொடங்கிட்டேன். 4 கிலோ முதல் 5 கிலோ விதைகளை வாங்கி காளான் வளர்ப்பை தொடங்கினேன்.
சில நேரங்கள்ல சொதப்பும். எனக்கு கத்துக்கொடுத்த அண்ணன்கிட்டயே போய் நிப்பேன். அவர் திரும்ப சொல்லிக் கொடுப்பாரு. நாளாக நாளாக, நானே அடுத்தடுத்து முயற்சி செய்ய ஆரம்பிச்சேன். தொழில் யுக்தியை கத்துக்கிட்டேன். இப்ப என்னோட முதலீடு கூட ஒரு மடங்கு லாபம் வருது” என்கிறார் ஸ்ரீராம், உற்சாகமாக.