கரோனா நோய்த்தொற்றை முழுமையாகக் கட்டுப்படுத்தும் வகையில் சேலம் மாவட்டத்தில் ஐந்து நாள்கள் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் எந்த ஒரு கடையும் திறக்கப்படாமல் வெறிச்சோடிக் காணப்பட்டது.
இந்த நிலையில் இன்று முழு ஊரடங்கு உத்தரவு முடிந்து, நிபந்தனைகளுடன் கடைகள், காய்கறிக் கடைகள் திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்றது.
இந்நிலையில், சேலம் பழைய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள தற்காலிக காய்கறிச் சந்தைகளில் இன்று அதிகாலை முதலே பொதுமக்கள் காய்கறிகள் வாங்க குவிந்தனர். சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்காமல், காவல் துறையினர் அறிவிப்பையும் காற்றில் பறக்கவிட்டுத் தங்களுக்கான காய்கறிகளை வாங்கினர்.
முழு ஊரடங்கிற்குப் பின்பு இன்று கடைகள் திறக்கப்பட்டதால் பொதுமக்கள் அதிகாலை 4 மணி முதலே தங்களுக்கான காய்கறிகளை வாங்கினர். இதனால் 9 மணிவரை செயல்படும் காய்கறிச் சந்தைகள் 6 மணிக்கு மூடப்பட்டன. இதனால், சுமார் 500-க்கும் மேற்பட்டோர் காய்கறிகள் கிடைக்காமல் திரும்பிச் சென்றனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், "ஊரடங்கு ஐந்து நாள்களுக்குப் பிறகு இன்றுதான் நாங்கள் வெளியில் வருகிறோம். ஆனால் எங்களுக்கான அத்தியாவசிய பொருள்கள், காய்கறிகள் உள்ளிட்ட எதுவும் கிடைக்காமல் மிகவும் இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.
தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் கூட்டம் கூடிய பொதுமக்கள் தற்போது காய்கறிச் சந்தைகளில் அனைத்துக் கடைகளும் மூடப்பட்டதால் காய்கறி கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கிறோம். எனவே அரசு உரிய நடவடிக்கை எடுத்து அதிகளவில் காய்கறிகளை இறக்குமதி செய்து பொதுமக்களுக்கு எளிதில் கிடைத்திடும் வகையில் வழிவகை செய்திட வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டனர்
இதையும் படிங்க:காற்றில் பறந்த தகுந்த இடைவெளி - வங்கி முன் அலைபோதும் கூட்டம்!